நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் தேர்தல் நடத்தப்பட்டால் பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்திய நாடாக இலங்கை பெயர் பதிக்கும்.
இவ்வாண்டில் முதல் 12 நாட்களுக்கான அரச செலவு 80 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும் , வருமானம் 26 பில்லியன் ரூபா மாத்திரமேயாகும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டி தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் ,
எம்மால் கடந்த ஆண்டு 2500 பில்லியன் ரூபா பணம் அச்சிடப்பட்டது. இதனை மறைக்க வேண்டிய அவசியமில்லை. எனினும் அன்றாட தேவைகளுக்காக இவ்வாறு பணம் அச்சிடப்படவில்லை. எனவே தான் இது பணவீக்கத்தில் தாக்கம் செலுத்தவில்லை.
இவ்வாண்டு ஜனவரி முதலாம் திகதி முதல் 12 ஆம் திகதி வரையான 12 நாட்களுக்கு அரச செலவுகள் 80.5 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும் வருமானம் 26 பில்லியன் மாத்திரமே. வருமானத்திற்கும் செலவிற்குமிடையில் 54 பில்லியன் இடைவெளி காணப்படுகிறது.
54 பில்லியன்களை எவ்வாறேனும் தேட வேண்டிய நிலைமை காணப்படுகிறது. மதிப்பிடப்பட்டுள்ள 80 பில்லியன் ரூபாவில் உள்ளடங்கும் எந்தவொரு செலவும் பிற்போடக் கூடியவையல்ல.
ஓய்வூதியக் கொடுப்பனவு , சமூர்த்தி, உரக் கொடுப்பனவு உள்ளிட்டவையே இந்த செலவுகளில் உள்ளடங்குகின்றன.
54 பில்லியனை எவ்வாறு தேடுவது என்பதிலேயே நாம் அவதானம் செலுத்தியுள்ளோம். இவ்வாறான நிலைமையிலேயே தேர்தலை நடத்துமாறு கோருகின்றனர்.
எம்மால் தேர்தலை நடத்த முடியும். ஆனால் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் பணத்தை அச்சிட்டு தேர்தலை நடத்திய ஒரு நாடாக இலங்கை உலகநாடுகள் மத்தியில் பெயர் பதிக்கும் என்றார்.