உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளை மறைக்கவே புலனாய்வுத்துறையின் முன்னாள் பிரதானிக்குப் பதவி உயர்வு

135 0

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட ஆணைக்குழுக்களின் அறிக்கைகளில் குற்றம் சாட்டப்படிருக்கும் பொலிஸ் புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் அரசாங்கம் பதவி உயர்வு வழங்கியுள்ளது. நிலந்த ஜயவர்த்தனவை பாதுகாக்க பாரியதொரு மறைமுக சக்தி செயற்பட்டு வருகின்றது.

அதனால்தான் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு  மூன்று ஜனாதிபதிகளுக்கும் முடியாமல் போயிருக்கின்றது என எதிர்க்கட்சி உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05)  இடம்பெற்ற குத்தகைக்கு கொடுக்கப்பட்ட வளவுகளின் உடைமையை மீளப்பெறுதல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொள்ள முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ்வினால் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் பொலிஸ் புலனாய்வுத்துறை முன்னாள் பிரதானி நிலந்த ஜயவர்த்தன வழங்கிய வாக்கு மூலங்களின் பிரகாரம், அவர் தாக்குதலை தடுப்பதற்கு தவறியுள்ளார்,  கையடக்க தொலைபேசியில் இருந்த தரவுகளை அழித்துள்ளார் பாேன்ற குற்றச்சாட்டுக்கள் ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் ஆணைக்குழு பரிந்துரை செய்திருக்கின்றது.

தேபோன்று தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்ட பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையிலும் இந்த குற்றச்சாட்டு தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

ஆனால் அரசாங்கம் அவருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு பதிலாக நிலந்த ஜயவர்த்தகவுக்கு பதவி உயர்வு வழங்கி இருக்கின்றது. பொலிஸ் தலைமையகத்தில் பொலிஸ் நிர்வாக துறைக்கு பொறுப்பாளராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் மா அதிபருக்கு அடுத்த தரத்துக்கு நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக தெரிவிக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பொலிஸ் திணைக்களத்தில் உள்ளக விசாரணைகூட இடம்பெறவில்லை.

ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளித்திருந்தார். ஆனால் நிலந்த ஜயவர்த்தனவுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஈஸ்டர் தாக்குதலை பிரசாரம் செய்து ஆட்சிக்கு வந்த கோத்தாபய ராஜபக்ஷ்வும் நடவடிக்கை எடுக்கவில்லை. இறுதியாக தற்போது ரணில் விக்ரமசிங்க அவருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளார்.

அதனால் நிலந்த ஜயவர்த்தனவை பாதுகாக்க பாரியதொரு மறைமுக சக்தி செயற்படுகின்றது. அந்த சக்தி 3ஜனாதிபதிகளின் காலத்திலும் செயற்பட்டிருக்கிறது.

இவருக்கு பதவி உயர்வு வழங்கியுள்ளதால் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் விசாரணை மேற்கொண்டு வந்த பொலிஸ் அதிகாரிகள் பிரச்சினைக்கு ஆளாகி இருக்கின்றனர். அந்த அதிகாரிகள் பழிவாங்கப்படலாம். அவர்கள் வேறு இடங்களுக்கு இடம் மாற்றப்படலாம்.

எனவே ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை கைதுசெய்து தண்டனை பெற்றுக்கொடுப்பதாக மக்கள் ஆணை பெற்றுக்கொண்டுள்ள இந்த அரசாங்கம், உண்மையான குற்றவாளிகளை, அதற்கு ஆதரவளித்தவர்களை மறைப்பதற்கு நடவடிக்கை எடுத்து வருவதையே காணமுடிகின்றது.

இது தொடர்பில் தொடர்ந்து கதைப்பதால் எமது உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்படலாம். என்றாலும் எமது உயிரை பணயம் வைத்தாவது ஈஸ்டர் தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்களை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.