புத்தரின் தந்த தாதுக்களை அவமதித்தமைக்காக சேபாலவுக்கு விளக்கமறியல்

105 0

 புத்த பெருமானின் புனித தந்த தாதுக்களை அவமதித்து பௌத்த மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும் விதமாக கருத்துக்களை சமூக வலைத் தலங்களில் வெளிப்படுத்தியமை தொடர்பிலான  குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுப் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்ட சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்கவை எதிர்வரும் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  கொழும்பு  மேலதிக நீதவான் தரங்கா  மஹவத்த வெள்ளிக்கிழமை (06)  இதற்கான உத்தரவை பிறப்பித்தார்.

பொலிஸ் தலைமையகத்துக்கு கிடைக்கப்பெற்ற  முறைப்பாடுகளுக்கு அமைய, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன இரு சம்பவங்கள் குறித்த விசாரணைகளை சி.ஐ.டி. எனும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள பிரதிப் பொலிஸ் மா அதிபர் பிரசாத் ரணசிங்கவுக்கு பாரப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி, அஸ்கிரிய மற்றும் மல்வத்து பெளத்த பீடங்களின் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு இவ்வாறு அம்முறைப்பாடுகள் சி.ஐ.டி.க்கு கையளிக்கப்பட்டுள்ளன.

அதில் ஒன்று, சமூக ஊடக ஆர்வலர்  சேபால அமரசிங்க புத்த பெருமானின் புனித தந்த தாதுக்கள் குறித்து முன் வைத்துள்ள சர்ச்சைக்குரிய கருத்துக்கள் குறித்த விசாரணைகளாகும்.

களனி புகையிரத நிலைய வீதி, பௌத்த தகவல் நிலையத்தின்  தலைவர் அஹுங்கல்லே ஸ்ரீ ஜினாநந்த தேரர், பௌத்த அலுவல்கள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் சுனந்த காரியப்பெருமவிடம் எழுத்துமூலம் முறைப்பாடு செய்த முறைப்பாடு, பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவிடம்  அனுப்பட்டதை அடுத்து, இவ்வாறு  குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பொது மக்கள்  முறைப்பாட்டுப் பிரிவுக்கு ,  விடயத்தை விசாரிப்பதற்காக பொறுப்பளிக்கப்பட்டதாக  சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இது குறித்து உதவி பொலிஸ்  அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் நேற்று இரவு ( 05) சேபால அமரசிங்கவின் பெல்லன்விலவில் அமைந்துள்ள  வீட்டுக்கு சென்ற சிறப்புக்குழு அவரைக் கைது செய்தது.

சேபால அமரசிங்க, 2007 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க சிவில் அரசியல் உரிமைகளுக்கான இணக்கப்பாட்டு சட்டம் மற்றும் தண்டனை சட்டக் கோவையின் கீழ் குற்றங்களை புரிந்துள்ளதாக கூறி விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ குறிப்பிட்டார்.

இந் நிலையிலேயே அவரை சி.ஐ.டி.யினர் கொழும்பு நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்தனர்.

இச்சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் பயன்படுத்திய கணனியை கைப்பற்றி கணனி தடயவியல் ஆய்வு கூடத்தில் வைத்து பகுப்பாய்வுகளை  மேற்கொண்டு வருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றில் தெரிவித்துள்ளது.

இந் நிலையிலேயே சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

இதனிடையே,  குருணாகல் – பொத்துஹர, வதாகட பகுதியில்  போலி தலதா மாளிகை ஒன்று நிர்மாணிக்கப்படுவது தொடர்பில் கிடைக்கப்பெற்ற முறைப்பாடும் பொலிஸ் மா அதிபரால் சி.ஐ.டி. பிரதிப் பொலிஸ்  மா அதிபருக்கு பாரப்படுத்தப்பட்டுள்ளது.

அது குறித்தும் உதவி பொலிஸ் அத்தியட்சர் ஒருவரின் கீழ் சிறப்புக் குழுவொன்று விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

ஜானக சேனாதிபதி என்பவர் இந்த வழிபாட்டிடத்தை பொத்துஹர , வதாகட பகுதியில் நிர்மாணிப்பதாகவும், இது குறித்து பல பக்தர்கள்  தமது நிதி பங்களிப்புக்களை,  நல்கி வருவதாகவும் கூறப்படுகின்றது. இந் நிலையிலேயே போலி தலதா மாளிகை தொடர்பிலான விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.