உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிக்க இம்முறை 2 இலட்சம் பேர் முதன் முறையாக தகுதி

129 0

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் வாக்களிப்பதற்கு 1 கோடியே  68 இலட்சம் பேர் தகுதி பெற்றுள்ளார்கள். இம்முறை 2 இலட்சம் பேர் முதன் முறையாக வாக்களிக்க தகுதி பெற்றுள்ளார்கள்.

எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதிக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு வேட்புமனுத்தாக்கலை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்வதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தபால் மூலமாக வாக்களிப்பதற்கான விண்ணப்பங்கள் வியாழக்கிழமை (05) முதல் கோரப்பட்டுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (22) நள்ளிரவுடன் தபால் மூல விண்ணப்பம் கோரல் நிறைவுப் பெறும்.

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான கட்டுப்பணம் செலுத்தல் நேற்று முதல் ஆரம்பமாகின.ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முதலாவதாக களுத்துறை தேர்தல் தொகுதிக்கான கட்டுப்பணத்தை செலுத்தியது.அத்துடன் இரு சுயேட்சை குழுக்கள் கண்டி மாவட்ட தேர்தல் தொகுதிக்கான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

அங்கிகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 221 ஆம் திகதி வரை தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2018 ஆம் ஆண்டு தேர்தல் இடாப்பு பெயர் பட்டியல் அடிப்படையில் இம்முறை ஒரு கோடியே 68 இலட்சம் பேர் வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளார்கள்.இம்முறை 2 இலட்சம் பேர் முதன்முறையாக வாக்களிக்க தகுதிப் பெற்றுள்ளார்கள்.

மக்கள் விடுதலை முன்னணியை தவிர ஏனைய அரசியல் கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிட அவதானம் செலுத்தியுள்ளன.

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான  ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தலைமையிலான மேலவை இலங்கை கூட்டணி மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும தலைமையிலான சுதந்திர மக்கள் சபை ஆகிய தரப்பினர் ஒன்றிணைந்து அரசியல் கூட்டணியை அமைக்க அவதானம் செலுத்தியுள்ளனர்.

மறுபுறம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியினர் பாராளுமன்றத்தில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் தரப்பினருடன் கூட்டணி அமைக்க பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்துள்ளனர்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசியல் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானித்துள்ளது.மொட்டு சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியி கட்சி மட்டத்தில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டதாக பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு இதுவரை உத்தியோகப்பூர்வமாக அறிவிப்பும் வெளியிடவில்லை.