பம்பலப்பிட்டி, பௌத்தலோக்க மாவத்தையில் 154 ஆம் இலக்க பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ள மரமொன்றில் தொங்கிக் கொண்டிருந்த கைக்குண்டொன்றை பொலிஸார் மீட்டுள்ளனர்.
பொலிஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலுக்கு அமைய இக்கைக் குண்டு மீட்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பில் பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்து சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள நபர் மொரந்துடுவ பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் எனவும், கொழும்பில் துப்புரவு தொழிலாளராக அவர் வேலை செய்வதாகவும் குறிப்பிட்ட பொலிஸார், அவரே கைக்குண்டு தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளதாகவும் தெரிவித்தனர்.
கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேகநபரிடம் நீண்ட விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதன்போது, மொரந்துடுவ – மஹா கோனதுவ பிரதேசத்தில் இருந்து தான் தொழிலுக்கு வரும் போது, வீதிக்கு அருகில் இரும்பு பந்து போன்ற ஒன்றைக் கண்டதாகவும், அதனை இரும்பிற்கு விற்பனை செய்வதற்கு கொண்டு வந்த பின்னர், மற்றுமொரு துப்புரவு பணியாளர் தம்மிடம் அது கைக்குண்டு என்பதை தெரிவித்ததாகவும் சந்தேக நபர் பொலிசாரிடம் கூறியதாக பொலிஸ் தகவல்கள் தெரிவித்தன.
அதனையடுத்தே பொலித்தீன் பையில் இட்டு அதனை மரமொன்றில் தொங்கவிட்டு பொலிஸாருக்கு தகவல் அளித்ததாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந் நிலையில் சந்தேகநபரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்படுவதாகவும், அவசியம் ஏற்படின் பயங்கரவாத தடுப்பு மற்றும் விசாரணைப் பிரிவின் ஒத்துழைப்பு பெற்றுக்கொள்ளப்படும் எனவும் விசாரணைகளை கையாளும் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் , பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் சம்பத் பத்மலாலின் தலைமையிலான குழுவினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது.