‘அதிவிரைவில் திட்ட மிட்டபடி மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும்’ என அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதி அளித்தார்.
அமெரிக்க அதிபராக பதவி ஏற்றுள்ள டொனால்டு டிரம்ப் தினமும் புது அறிவிப்புகளை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார். வெளிநாட்டினர் ஊடுருவலை தடுக்க மெக்சிகோ எல்லையில் தடுப்பு சுவர் கட்டப்படும் என அறிவித்தார்.
அதைத்தொடர்ந்து எல்லையில் தற்காலிக சுவர்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு அமெரிக்காவிலும், மெக்சிகோவிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இருந்தும் சுவர் கட்டுவதில் டிரம்ப் உறுதியாக இருக்கிறார்.
சன்சர்வேடிவ் அரசியல் நடவடிக்கை காங்கிரஸ் கூட்டத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் கலந்து கொண்டு பேசினார். அப்போது, ‘எனக்கு முதலில் அமெரிக்க குடிமக்களின் நலன்தான் முக்கியம். எனவே மெக்சிகோ எல்லையில் மிகப்பெரிய சுவர் கட்டுவோம். திட்டமிட்டபடி சுவர் கட்டும் பணி விரைவில் தொடங்கும். கெட்ட மனிதர்கள் நாட்டை விட்டு வெளியேற்றப்படுவார்கள்’ என்றார்.
மேரிலேண்டில் நடந்த நிகழ்ச்சியிலும் இதே கருத்தை டிரம்ப் பிரதிபலித்தார்.
அப்போது அங்கு கூடியிருந்தவர்கள் டிரம்புக்கு வாழ்த்து கோஷங்களை எழுப்பினார்கள். சமீபத்தில் அமெரிக்க வெளியுறவு மந்திரி ரெக்ஸ் டில்லர்சன், உள்துறை மந்திரி ஜான் கெல்லி ஆகியோர் மெக்சிகோ சென்று தங்கள் துறை மந்திரிகளுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்கள்.
இந்த நிலையில் தற்போது டிரம்ப் வெளியிட்டுள்ள இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெற்றுள்ளது.