தி.மு.க.வுடன் கூட்டு சேர்ந்து அ.தி.மு.க. ஆட்சியை கவிழ்க்க ஓ.பன்னீர் செல்வம் சதி செய்தார் என்று திண்டுக்கல்லில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.சீனிவாசன் தெரிவித்தார்.
மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 69-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் திண்டுக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்தில் வனத்துறை அமைச்சர் சி.சீனிவாசன் பேசியதாவது:-
தமிழகத்தில் அ.தி.மு.க. தனது நிலையான ஆட்சியை தொடர்ந்து வழங்க பாடுபட்டு வருகிறது. ஆனால் கட்சியில் இருந்து பிரிந்து சென்ற ஓ.பன்னீர்செல்வம் சில எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் இந்த ஆட்சியை கவிழ்த்து விடலாம் என நினைக்கிறார்.
ஜெயலலிதா மறைவின்போது சசிகலா ஆலோசனையின் பேரில் தான் ஓ.பன்னீர்செல்வம் முதல்வராக தேர்வாகி பதவி ஏற்றார். ஆனால் அவர் பதவி ஏற்ற பிறகு நடந்த நிகழ்ச்சிகளுக்கு எல்லாம் தான்தான் காரணம் என்பதைபோல பெருமை பேசி வந்தார்.
குறிப்பாக ஜல்லிக்கட்டு பிரச்சினை தன்னால்தான் தீர்த்து வைக்கப்பட்டது என சுய விளம்பரம் தேடினார். ஜல்லக்கட்டு பிரச்சினையின்போது மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது சசிகலாதான் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி இப்பிரச்சினையை தீர்க்க கோரியும் நிரந்தர சட்டத்தை அரசிதழில் வெளியிடவும் வற்புறுத்தினார்.
ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து விலகி தன்னுடன் 30 எம்.எல்.ஏ.க்கள் வந்து விட்டால் அ.தி.மு.க. ஆட்சியை கலைத்து விடலாம் என நினைத்தார். மேலும் எதிர்கட்சி தலைவர் ஸ்டாலினுடன் கூட்டு சேர்ந்து அவரை முதல்-அமைச்சராக்கவும் நினைத்தார். அ.தி.மு.க. தொண்டன் யாரும் தி.மு.க.வுடன் கூட்டணி வைப்பதை விரும்பமாட்டார்கள்.
அதன்படிதான் தற்போது உண்மையான அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர். கட்சியை விட்டு விலகியவர்கள் உண்மையிலேயே பதவிக்காக விலகவில்லை என்றால் தங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து விட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெறட்டும்.
ஜெயலலிதா, சசிகலா மீது சொத்து குவிப்பு வழக்கு தொடர்ந்தது தி.மு.க.தான். இதேபோல ஜெயலலிதா மீது 12 வழக்குகள் தொடுக்கப்பட்டன. அதில் 11 வழக்குகளில் நிரபராதி என விடுவிக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கிலும் ஜெயலலிதா விடுதலையாகி இருப்பார். ஆனால் அரசியல் விரோதிகளின் சூழ்ச்சியால் தற்போது சசிகலா சிறைக்கு சென்றுள்ளார்.
இந்த வழக்கில் நாங்கள் அடுத்து செய்ய வேண்டிய பணிகள், அவரை விடுவிக்க சாத்தியமான வழிமுறைகள் குறித்து ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.