தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும், தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை என அமைச்சர் பி.தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகில் மறைந்த முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ராசிபுரம் நகர அ.தி.மு.க. செயலாளர் எம்.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார்.
மாவட்ட பிரதிநிதி எஸ்.ஆர். சண்முகசுந்தரம் வரவேற்றார். ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் இ.கே.பொன்னுசாமி (நாமகிரி பேட்டை கிழக்கு), காளியப்பன் (ராசிபுரம்), வக்கீல் தாமோதரன் (வெண்ணந்தூர்), எல்.எஸ்.மணி (நாமகிரிபேட்டை மேற்கு) ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், தமிழக மின்சாரம் மற்றும் ஆயத்தீர்வை துறை அமைச்சருமான பி.தங்க மணி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
திருமணத்தின்போது சீப்பை மறைத்து வைத்து விட்டால் திருமணம் நின்று போய்விடும் என்ற மனக்கணக்கு சிலர் போட்டுக்கொண்டு உள்ளனர். எப்படிப்பட்ட சோதனையான காலத்திலும் இந்த இயக்கத்தை கட்டிக்காத்து வருபவர்கள் தொண்டர்கள். மக்களுக்காக பணியாற்றியவர் ஜெயலிதா. அவர் மறைந்து 2 ½ மாதம் தான் ஆகிறது. அதற்குள் எத்தனை துரோகங்கள் நிகழ்ந்திருக்கிறது என்பதை இங்குள்ளவர்கள் நன்கு அறிந்திருப்பீர்கள். துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. எங்களுக்குள் அதிகார போட்டி என்கிறார்கள்.
எங்களுக்குள் அதிகார போட்டி இல்லை. சாதாரண எடப்பாடி பழனிச்சாமி முதல் அமைச்சர் ஆக வந்துள்ளார் என்றால் அதுதான் இந்த இயக்கத்தின் பெருமை. ஜெயலலிதாவுக்கு எதிரி கட்சி தி.மு.க., அவருக்கு எதிரி கருணாநிதி. அதேபோல்தான் நமக்கும் எதிரி கட்சி தி.மு.க.தான். எதிரி கருணாநிதி, எதிரி ஸ்டாலின். ஆனால் தி.மு.க. ஆட்சிக்கு வர வேண்டும் என்பதற்காக துரோகிகள் துணை போகின்றனர்.
இந்த இயக்கத்திற்கு துரோகம் செய்துவிட்டுச் சென்றவர்களை மக்கள் மன்னிக்க மாட்டார்கள். ஜெயலலிதாவின் மறைவிற்கு பிறகு 2 மாதம் முதல் அமைச்சராக இருந்த பன்னீர் செல்வம் ஏதாவது திட்டத்தை அறிவித்தாரா? ஆனால் எடப்பாடி பழனிசாமி முதல் அமைச்சர் ஆக பதவியேற்றதும் முதலில் 5 திட்டங்களுக்கு கையெழுத்திட்டார்.
அதில் அவர் முதலில் கையெழுத்திட்டது மதுக்கடைகளை முடுவதற்கான உத்தரவு. 2-வது ஆக பெண்களுக்கு 50 சதவீத மானியத்துடன் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்திற்கான உத்தரவில் கையெழுத்திட்டார்.
இதில் யார் ஜெயலலிதாவின் உண்மை விசுவாசிகள் என்பதை நினைத்து பார்க்க வேண்டும். வாக்காளர் என்ற பெயரில் நான் இறந்து விட்டதாக (கண்ணீர் அஞ்சலி) சமூக வலைதளங்களில் தகவல் பரப்புகின்றனர். இது நியாயம்தானா? அதைப் பற்றி நான் கவலைப்படவில்லை. திருஷ்டி போய்விட்டதாக கருதுகின்றேன்.
இரட்டை இலை சின்னத்தில் நின்று வெற்றி பெற்ற பி.ஆர்.சுந்தரம் எம்.பி. அந்த சின்னத்தை முடக்க மனு கொடுக்கிறார் என்றால் அவர் உண்மையான அ.தி.மு.க. தொண்டாரா? துரோகம் எப்போதும் வெற்றி பெற்றதில்லை. உண்மையே வெற்றி பெறும். இந்த இயக்கத்தை காப்பாற்ற நாங்கள் கஷ்டப்படுகிறோம். அவர்கள் இரட்டை இலையை முடக்க முயற்சிக்கின்றனர்.
நாமக்கல் மாவட்டம் எப்போதும் ஜெயலலிதாவின் கோட்டை என்பதை வருகின்ற உள்ளாட்சி தோதலில் நிரூபிக்க வேண்டும்.
சட்டமன்றத்தில் 122 பேரும் ஒற்றுமையாக இருந்ததால் ஜெயலலிதாவின் ஆட்சி நீடித்தது. அந்தப் பக்கம் 10 பேர் போயிருந்தால் ஆட்சி கலைந்திருக்கும். அப்படி ஆட்சி கலைந்திருந்தால் தி.மு.க. ஆட்சிக்கு வந்துவிடும். அதற்கு நாம் இடம் தரலாமா? தி.மு.க.வினர் சட்டமன்றத்தில் கை கலப்பு வராதா? அதனால் அ.தி.மு.க. ஆட்சி கலைக்கப்படாதா? என்று நினைத்து செயல்பட்டனர். சட்டமன்றத்தில் சபாநாயகரிடம் தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை நீங்கள் தொலைக்காட்சியில் பார்த்திருப்பீர்கள். ஆனால் நாங்கள் 122 பேரும் எப்படியாவது ஜெயலலிதாவின் ஆட்சி நீடிக்க வேண்டும், அவர் கொண்டு வந்த திட்டங்களை செயல்படுத்த வேண்டும். ஜெயலலிதா கட்டிக்காத்த அ.தி.மு.க. காப்பாற்றப்பட வேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக சட்டமன்றத்தில் அமைதியாக இருந்தோம். சட்டமன்றத்தில் ஸ்டாலின் சட்டையை யாரும் கிழிக்கவில்லை. அவரே கிழித்துக் கொண்டு வெளியே வந்து நிருபர்களிடம் காட்டுகிறார். தலைவர் என்றால் ஒரு தகுதி வேண்டும். தலைவருக்கான தகுதி ஸ்டாலினிடம் இல்லை.
அவரிடம் ஆட்சியை ஒப்படைத்தால் ஜெயலலிதா கொண்டு வந்த எந்த திட்டமும் மக்களுக்கு கிடைக்காது. அப்படிப்பட்டவரிடம் ஆட்சியை ஒப்படைக்கலாமா? ஒரு சொத்துக்காக 6 பேரை வெட்டிக்கொன்ற தி.மு.க.வுக்கு துணை போகலாமா? சட்டமன்றத்தில் தி.மு.க.வினர் நடந்து கொண்ட விதத்தை மக்கள் மத்தியில் இருந்து மறைப்பதற்காக ஸ்டாலின் உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்துகிறார். ஜனாதிபதி, கவர்னரிடம் மனு கொடுக்கிறார். சோனியா காந்தி, ராகுல் காந்தியை சந்திக்கிறார்.
ஜெயலலிதாவின் ஆட்சியில்தான் இந்த பகுதிக்கு சுற்றுச்சாலை, 4 வழிச்சாலை அமைப்பதற்கு ரூ.320 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ரூ.150 கோடியில் நாமக்கல்- திருச்செங்கோடு சாலை அமைக்கும் பணிகள் நடந்து வருகின்றது.
அதேபோல் திருச்செங்கோடு-வேலூர் சாலை ரூ.65 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகின்றது. இருக்கின்ற 4 1/2 ஆண்டுகளில் நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அனைத்து வசதிகளையும் கிடைக்கச் செய்வோம். வறட்சி நிவாரணத்திற்காக முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 2247 கோடி ஒதுக்கீடு செய்துள்ளார். அதில் நாமக்கல் மாவட்டத்திற்கு ரூ.21 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இது மக்களாகிய உங்கள் ஆட்சி. இது மக்கள் இயக்கம். அந்த இயக்கத்தை நீங்கள் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
இவ்வாறு அமைச்சர் பி.தங்கமணி கூறினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் டாக்டர் சரோஜா பேசியதாவது:-
இங்கிருந்து பிரிந்து சென்ற பி.ஆர்.சுந்தரம் எம்.பி. இங்கே மேடை போட்டு ஏதோ பேசி விட்டுச் சென்றுள்ளார்.
அவர் எம்.பி. ஆனதில் இருந்து ஏதேனும் ஒரு திட்டத்தை கொண்டு வந்தாரா? அவர் ஏதேனும் செய்ததை சொல்ல முடியுமா? முதல் அமைச்சர் பதவி கிடைக்கவில்லை என்றதும் முதல் அமைச்சராக இருந்த பன்னீர்செல்வத்திற்கு அனைத்து சந்தேகமும் வருவது ஏன்? அரசியல் அனுபவம் படைத்த ராசிபுரம் மக்கள் இதை நினைத்துப் பார்க்க வேண்டும். எங்களது அரசியல் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம். கமெண்ட் அடிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும். இந்த அரசு மக்களுக்காக மக்கள் நலனுக்காக பாடுபட்டு வருகிறது.
ராசிபுரத்தில் குடிநீர் பிரச்சனையை போக்க தனி குடிநீர் திட்டம் கொண்டு வர முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளேன்.
இவ்வாறு அமைச்சர் சரோஜா கூறினார்.