தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் பேசினேன்: ஸ்டாலின் பேட்டி

265 0

தமிழக அரசியல் நிலவரம் பற்றி சோனியாவிடம் பேசியதாக தி.மு.க. செயல் தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

தி.மு.க. செயல் தலைவரும், தமிழக சட்டசபை எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வுகள் பற்றி ஜனாதிபதியிடம் புகார் அளித்தார்.

பின்னர் அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். அப்போது காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல் காந்தியும் உடன் இருந்தார்.

பின்னர் மு.க.ஸ்டாலின் அளித்த பேட்டி வருமாறு:-

கேள்வி:- கடந்த 18-ந் தேதி சட்டசபையில் நடந்த சம்பவம் பற்றி ஜனாதி பதியிடம் புகார் மனு கொடுத்திருந்தீர்களே? அவர் உங்களுடன் கருத்து பரிமாறினாரா?

பதில்:- நாங்கள் கொடுத்த மனுவினை ஒரு வரி விடாமல் முழுமையாகப் படித்து பார்த்து அதற்குப் பிறகு அது பற்றி எங்களிடத்திலே விவாதித்தார். “ஏற்கனவே தமிழக ஆளுநர் பொறுப்பிலே இருக்கக்கூடிய கவர்னர் அனுப்பியிருக்கக்கூடிய அறிக்கையையும் நான் பரிசீலித்துக் கொண்டிருக்கிறேன். நீங்கள் கொடுத்ததையும் நான் படித்திருக்கிறேன். இது குறித்து நான் எந்த மட்டத்திலே விவாதிக்க வேண்டுமோ அந்த மட்டத்திலே விவாதித்து உரிய நடவடிக்கை எடுக்கிறேன்” என்ற உறுதியை என்னிடத்திலே தந்திருக்கிறார்.

கே:- இந்தச் சம்பவம் தொடர்பாக அடுத்த கட்டமாக தி.மு.க. சார்பிலே என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறீர்கள்?

ப:- ஏற்கனவே ஆளுநரிடத்திலே தந்து, அதற்குப் பிறகு குடியரசுத் தலைவரிடம் மனுக் கொடுத்திருக்கிறோம். அதையும் தாண்டி உயர் நீதிமன்றத்திற்கும் சென்றிருக்கிறது. அது ஒரு கட்டம். இதற்கிடையில் தி.மு.க. சார்பிலே மாவட்டத் தலைநகரங்களிலே உண்ணாவிரதம் நடத்தி முடித்திருக்கிறோம். எனவே நல்ல விடை வரவில்லை என்று சொன்னால், இப்போது அமைந்திருக்கக் கூடிய ஆட்சியைப் பொறுத்தவரையில் ஏதோ அரசியல் ரீதியாக தி.மு.க.வும் காங்கிரஸ் மட்டும் எதிர்க்கிறது என்பதல்ல.

இப்போது எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைந்திருக்கக்கூடிய இந்த ஆட்சி, தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கக் கூடிய சசிகலா நடராஜனுடைய கட்டுப்பாட்டிற்குள் இருக்கக் கூடிய ஆட்சியாக – அவருடைய பினாமி ஆட்சியாக அமைந்திருக்கிறது.

இந்த ஆட்சி ஒரு போதும் இருக்கக்கூடாது என்று தமிழ் நாட்டு மக்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த அடிப்படையில் தமிழ் நாட்டு மக்களையும் இணைத்து ஒரு மிகப் பெரிய போராட்டத்தை தொடர்ந்து தமிழ்நாட்டிலே நடத்துவதற்கான முயற்சிகளில் நாங்கள் நிச்சயமாக ஈடுபடுவோம்.

கே:- காங்கிரஸ் தலைவர் சோனியாகாந்தி, துணைத் தலைவர் ராகுல்காந்தி ஆகியோரைச் சந்தித்துப் பேசியிருக்கிறீர்கள்! அந்தச் சந்திப்பின் போது என்ன விவாதிக்கப்பட்டது? இரு கட்சிகளின் கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டதா? அரசியல் நிலவரம் குறித்துப் பேசப்பட்டதா?

ப:- அரசியல் கூட்டணி பற்றி எதுவும் பேசவில்லை. மரியாதை நிமித்தமான சந்திப்பாகத்தான் நாங்கள் நேரம் கேட்டோம். உடனடியாக வரச் சொன்னார்கள். அதற்குப் பிறகு நாங்கள் போய் சந்தித்தோம். சோனியா காந்தியின் உடல் நலத்தைப் பற்றி நான் விசாரித்தேன். சோனியா காந்தி, கலைஞரின் உடல் நலத்தைப் பற்றி மிக உன்னிப்பாக விசாரித்தார். அதற்குப் பிறகு தமிழக சட்டமன்றத்திலே நடந்த சம்பவங்களைப் பற்றி மிகுந்த வருத்தத்தோடு கேட்டார்.

இப்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை, தமிழகத் தில் உள்ள அரசியல் நிலைமைகள் பற்றியெல்லாம் என்னிடத்திலே கேட்டார். அதற்கு உரிய விளக்கங்களை அவரிடத்திலே சொன்னேன். மற்றபடி தேர்தல் சம்பந்தமாகவோ, கூட்டணி சம்பந்தமாகவோ நாங்கள் விவாதிக்கவில்லை.

கே:- உள்ளாட்சித் தேர்தல் வரவிருக்கிறது. அதிலே தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி தொடர்ந்து நீடிக்குமா? காங்கிரஸ் மற்றும் தி.மு.க. இடையேயான உடன்படிக்கை எவ்வாறு இருக்கும்?

ப:- ஏற்கனவே சட்டமன் றத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி வைத்து தேர்தல் களத்திலே ஈடுபட்டோம். அதற்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டது. அது நடக்கவில்லை. அறிவிக்கப்பட்டு வேட்பு மனுத்தாக்கலும் செய்யப்பட்டது. உயர் நீதிமன்றத்தடை காரணமாக அது நிறுத்தப்பட்டது.

அந்தத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துதான் நாங்கள் தேர்தல் களத்திலே ஈடுபட்டோம். இப்பொழுது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. அடுத்து தேர்தல் எந்தத் தேதியில் அறிவிக்கப்படுகிறதோ அப்பொழுது உட்கார்ந்து அதுபற்றி தலைமை அளவிலே பேசி முடிவு செய்யப்படும்.

கே:-அ.தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் குடும்ப அரசியலே இருக்காது என்று கூறி இருக்கிறாரே?

ப:-குடும்ப அரசியல் இருக்கிறதா? இல்லையா? என்பது நாட்டு மக்களுக்குத் தெரியும். அது அவர்களின் உட்கட்சி விவகாரம். அதைப்பற்றியெல்லாம் நான் அதிகமாக விமர்சிக்கவோ, விவாதிக்கவோ விரும்ப வில்லை.

கே:-தி.மு.க. ஆட்சி தமிழகத்தில் விரைவில் மலரும் என்று சொல்லியிருக்கிறீர்கள். எந்த நம்பிக்கையிலே அந்த ஒரு கருத்தை முன் வைத்திருக்கிறீர்கள்?

ப:- ஏற்கனவே தமிழ்நாட்டிலே 5 வருடம் அ.தி.மு.க. ஜெயலலிதா தலைமையில் ஆட்சியில் இருந்த போதும் சரி, அதற்குப் பிறகு மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வந்த போதும் தமிழ்நாட்டிலே எந்தப் பணிகளும் நடைபெறாமல் அரசு நிர்வாகமே ஸ்தம்பித்து இருக்கக்கூடிய நிலையில் இருக்கிறது. தமிழ்நாட்டில் எல்லாத் தரப்பு மக்களுமே கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். எனவே இதை மாற்றக்கூடிய எண்ணத்தோடு மக்கள் இருக்கின்ற காரணத்தால், எந்த நேரத்தில் தேர்தல் வந்தாலும் நிச்சயமாக மக்கள் ஒரு மாற்றத்தை திராவிட முன்னேற்றக் கழகத்தின் மூலம் உருவாக்குவார்கள்.

இவ்வாறு மு.க.ஸ்டாலின் கூறினார்.