தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை, அபகரிக்கப்பட்ட நிலங்களை விடுவித்தல் உள்ளிட்ட உடனடியான பிரச்சினைகள் தொடர்பில் அடுத்து வரும் நாட்களில் சாதகமான சமிக்ஞைகள் கிடைக்காது விட்டால் பேச்சுவார்த்தைகளை தொடர்வதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத் தரப்பிடம் தெரிவித்துள்ளது.
அத்துடன், தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கு முன்னதாக அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞைகள் வெளிப்பட வேண்டும் என்று காலக்கெடுவை விதித்துள்ளதோடு, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை முன்னெடுப்பது தொடர்பான திட்ட முன்மொழிவொன்றையும், நிரந்தரமான அரசியல் தீர்வு விடயத்தில் அதிகாரங்கள் பகிரப்படுவதற்கான திட்ட முன்மொழிவொன்றையும் தனித்தனியாக கையளிப்பதற்கும் தீர்மானித்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தரப்பினருக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தையொன்று ஏற்கனவே எட்டப்பட்டிருந்த இணக்கப்பாட்டுக்கு அமைவாக நேற்று வியாழக்கிழமை ஜனாதிபதி செயலகத்தில் மாலை ஐந்து மணிமுதல் ஆறுமணி வரையில் இடம்பெற்றிருந்தது.
தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் எதிர்வரும் பத்தாம் திகதி தொடர்ச்சியான பேச்சுக்கள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் அதற்கான நிகழ்ச்சி நிரலை தயாரிப்பதை இலக்காக கொண்டு முன்னெடுக்கப்பட்ட இந்தப் பேச்சுவார்த்தையில் ஆளும் தரப்பில் பிரதமர் தினே~;குணவர்த்தன, அமைச்சர்களான ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்~, டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பங்கேற்றிருந்தனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், சம்பந்தன் தலைமையில் சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன், ஜனாதிபதி சட்டத்தரணி சுமந்திரன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.
இந்நிலையில், குறித்த பேச்சுவார்த்தை தொடர்பில் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரான சுமந்திரன் தெரிவித்தாவது,
கடந்த, மாதம் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான குழுவினரை நானும் சம்பந்தனும் சந்தித்தபோது, தமிழ் அரசியல் கைதிகளில் ஐவரை உடனடியாக விடுதலை செய்ய முடியும் என்றும், அபகரிக்கப்பட்ட நிலங்களில் ஒருபகுதிகயை உடனடியாக விடுவிக்க முடியும் என்றும் ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், அதுதொடர்பில் எவ்விதமான குறைந்த பட்ச செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படவில்லை என்பதை நாம் அவர்களிடத்தில் தெரிவித்திருந்தோம். அவ்விதமான நிலையில் அடுத்தகட்டம் நோக்கி எவ்வாறு நம்பிக்கையுடன் நகர்வது என்பது தொடர்பிலும் நாம் கேள்விகளைத் தொடுத்திருந்தோம்.
எம்மைப்பொறுத்தவரையில் முன்னெடுக்கப்படும் பேச்சுக்கள் நம்பகத்தன்மையை ஏற்படுத்த வேண்டுமானால் அரசாங்கத்திடமிருந்து எமது மக்கள் சார்ந்த உனடியான பிரச்சினைகளில் சாதகமான சமிக்ஞைகளை வெளிப்படுத்த வேண்டும். அவ்வாறு வெளிப்படுத்தப்படாது பேச்சுக்களை முன்னெடுப்பதில் எவ்விதமான பயன்களும் இல்லை என்பதையும் அரசாங்கத்திடம் நேரடியாகவே தெரிவித்துள்ளோம்.
இவ்வாறான நிலையில் அடுத்த பத்தாம் திகதி தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தொடர்ச்சியான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்படவுள்ளது. அந்தப்பேச்சுவார்த்தை வெற்றிகரமான நகர வேண்டுமாயின் அரசாங்கம் சாதகமான பிரதிபலிப்பைச் செய்ய வேண்டியுள்ளது. அதுவரையில் அரசாங்கத்திற்கு காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது.
இதேநேரம், தேசிய இனப்பிரச்சினை தொடர்பான பேச்சுக்களை முன்னெடுப்பதற்கு முன்னதாக எம்மால் இரு திட்ட முன்மொழிவுகள் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்படவுள்ளன. அதில் முதலாவது, தற்போதைய அரசியலமைப்பில் உள்ள அதிகாரப்பகிர்வு விடயங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலானதாகும். அடுத்த திட்ட முன்மொழிவானது, இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கான முன்னெடுப்புக்களின்போது, நிரந்தரமாக மேற்கொள்ளப்பட வேண்டிய அதிகாரப்பகிர்வினை மையப்படுத்தியதாகும்.
இந்த இரு முன்மொழிவுகளும் விரைவில் எம்மால் அனுப்பி வைக்கப்படவுள்ளன. ஏற்கனவே 13ஆவது திருத்தச்சட்டத்தினை நடைமுறைப்படுத்துவதில் தடையாக காணப்படுகின்ற அரசியலமைப்பு சட்ட ஏற்பாடுகள் பற்றிய ஆவணம் ஜனாதிபதியிடத்தில் கையளிக்கப்பட்டுள்ளது என்றார்.