மன்னார் நீதிமன்ற காவலில் இருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து 116 கிலோ கேரள கஞ்சா மீட்பு

149 0

மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இருந்து மேலும் ஒரு தொகுதி கேரள கஞ்சா போதைப்பொருள் நேற்று புதன்கிழமை (4) மாலை நீதிமன்றத்தின் நுழைவு பகுதியில் இருந்து போதை பொருள் பணியக அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் விசேட அதிரடிப்படையினர் மற்றும் பொலிஸார் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே கடந்த நவம்பர் மாதம் கடத்தல் ஒன்றுடன் தொடர்புபட்டதாக  மீட்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த டிப்பர் வாகனத்தில் இரகசியமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பொதி செய்யப்பட்ட கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டுள்ளது.

கடந்த நவம்பர் மாதம் இலுப்பக்கடவை பொலிஸாரின் சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது குறித்த டிப்பர் வாகனத்தில் இருந்து  ஒரு தொகை கேரள கஞ்சா மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் இருவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில் குறித்த டிப்பர் வாகனம் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில்  நேற்று புதன்கிழமை   அதே டிப்பர் வாகனத்துக்குள் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 116 கிலோ கிராம்  கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

கைப்பற்றப்பட்ட கஞ்சா   நேற்று புதன்கிழமை இரவு மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில்   மேலதிக விசாரணைகளின் பின்னர் மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.