அமெரிக்காவில் இருந்து மேற்குவங்கத்திற்கு வந்த 4 பேருக்கு புதிய வகை கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில அரசின் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு முதலில் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து தான் முதல் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. பின்னர் அந்த வைரஸ் உலகம் முழுவதும் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சீனாவில் மீண்டும் கொரோனா அலை ஏற்பட்டுள்ளது. ஒமைக்ரானின் மாறுபாடான பி.எப்.7 என்ற வைரசால் தொற்று பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது. சீனாவில் ஒரு நாளில் 49 லட்சம் முதல் 53 லட்சம் வரை புதிய கொரோனா பாதிப்புகள் உறுதி செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்த புதிய வகை கொரோனா ஜப்பான், அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி வருகிறது. இதையடுத்து இந்தியா, இத்தாலி, மலேசியா உள்ளிட்ட நாடுகளில் சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு கொரோனா பரிசோதனை கட்டாயம் என அறிவித்தது.
இந்நிலையில் அமெரிக்காவில் இருந்து இந்தியா வந்த 4 பேருக்கு பிஎஃப் 7 கொரோன வகை உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து மேற்வங்க மாநில சுகாதாரத்துறை கூறுகையில், அமெரிக்காவில் இருந்து மேற்குவங்கம் வந்த 4 பேருக்கு புதிய வகை பிஎஃப் 7 கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே அவர்களை தனிமைப்படுத்தி, தீவிரமாக கண்காணித்து வருவதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.