லசந்த கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும்!

259 0

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலை தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டுமென சீ.பீ.ஜே எனப்படும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் கமிட்டி கோரியுள்ளது.

லசந்த கொலையாளிகள் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டுமென சீ.பீ.ஜே ஊடக அறிக்கை ஒன்றின் மூலம் கோரியுள்ளது.

ஊடகவியலாளர் கீத் நொயார் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அண்மையில் ஐந்து இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் நடத்திய விசாரணைகளின் போது லசந்த கொலை பற்றிய விபரங்களும் வெளியானதாக ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

லசந்த கொலை தொடர்பிலான விசாரணைகளில் மெய்யான முன்னேற்றம் வரவேற்கப்பட வேண்டியது என சீ.பீ.ஜே.வின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரொபர்ட் மஹோனி தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளை தண்டிப்பதற்கான முனைப்புக்களில் எவ்வித மாற்றங்களும் இருக்கக் கூடாது எனவும் அதற்கு சட்டம் ஒழுங்கை பாதுகாப்போர் இடமளித்துவிடக் கூடாது எனவும் அவர் கோரியுள்ளார்.