தண்ணீரூற்று பொதுச் சந்தையை குத்தகைதாரர்கள் பூட்டியதால் வியாபாரிகள் போராட்டம்

102 0

முல்லைத்தீவு மாவட்டத்தின் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் ஆளுகைக்கு கீழிருந்த  தண்ணீரூற்று பொதுச் சந்தையில் நேற்று முன்தினமும் நேற்றும் வியாபாரிகள் வீதிக்கிறங்கி போராடிய நிலையில், இன்று வியாழக்கிழமை (ஜன. 5) மீண்டும் தங்கள் வியாபார நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளனர்.

இவ்விடயம் தொடர்பில் தெரியவருவதாவது:

தண்ணீரூற்று பொதுச் சந்தையினை புதிதாக இந்த வருடத்தில் குத்தகைக்கு எடுத்தவர்கள் அதிகளவான வரியினை விதிப்பதால், தாம் வியாபாரம் செய்யமுடியாத நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாக சந்தை வியாபாரிகள் முரண்பட்டு வருகின்றனர்.

இதேவேளை இவ்வாண்டு சந்தையை புதிதாக குத்தகைக்கு எடுத்திருப்போர் சந்தையின் வாசலில் சோதனைச்சாவடி போல் வாகனங்களை மறிப்பதற்கு துலா ஒன்றினை புதிதாக வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இறைச்சியை இறக்குவதற்காக வாகனமொன்று சந்தைக்குள் சென்றபோது, அவ்வாகனம் துலாவில் பட்டு விபத்துக்குள்ளானதில், துலா உடைந்துள்ளது.

இதனையடுத்து சந்தை குத்தகைதாரர்கள் பொலிஸாரை வரவழைத்ததையடுத்து, கோழிக்கடை உரிமையாளர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனால் சந்தையில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் சந்தை வியாபாரிகள் பொலிஸ் நிலையத்துக்குச் செல்ல, அவ்வேளை வியாபார நிலையங்களையும் சந்தை வளாகத்தினையும் தன்னிச்சையாக குத்தகைதாரர்கள் பூட்டியுள்ளனர்.

இதனையடுத்து அன்றைய தினம் பொதுச் சந்தையின் அனைத்து வியாபாரிகளும், தமது வியாபார நடவடிக்கைகள் முடக்கப்பட்டுள்ளதாக கவலை தெரிவித்துள்ளதோடு, குத்தகைதாரர்கள் மூடிய வியாபார நிலையங்களை திறக்கும்படியும் கோரி, எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டனர்.

இதனால் குறித்த சந்தையில் மரக்கறி, மீன், இறைச்சி போன்றவற்றின் விற்பனை நிலை தடைப்பட்டுள்ளது.

இந்நிலையில் சந்தையினை திறக்குமாறு குத்தகைதாரர்களிடம் வியாபாரிகள் கேட்டுக்கொண்டதற்கு, அவர்கள் பிரதேச சபையிடம் செல்லும்படி கூறியுள்ளனர்.

அதன்படி, வியாபாரிகள் பிரதேச சபையிடம் சென்று முறையிட, பிரதேச சபையினரோ குத்தகைதாரர்களிடமே சென்று பிரச்சினை குறித்து பேசி தீர்மானம் எடுக்கும்படி வியாபாரிகளிடம் கூறியுள்ளனர்.

அதன் பின்னர், வியாபாரிகள் சந்தையினை திறந்து, தங்கள் மரக்கறிகள், பழங்கள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி, கரைதுறைப்பற்று பிரதேச சபையின் தலைமை அலுவலகத்திலும், முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்துள்ளனர்.

வணிக நிலையங்களுக்கான திறப்பினை தங்கள் வசம் வைத்திருக்கும்போது குத்தகைதாரர்கள் தாமாக வியாபார நிலையங்களையும் சந்தையின் வாசல் கதவினையும் பூட்டிட்டு மூடியுள்ளனர்.

இதனால் வியாபாரிகள் சந்தையினுள் பிரவேசித்து, வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட முடியாமல் தவித்துள்ளனர்.

மேலும், இது மக்களுக்கான பொதுச்சந்தையா அல்லது தனியாரின் சொத்தா என கேள்வியெழுப்பியதோடு, பிரதேச சபையின்  செயற்பாடு குறித்து விசனமும் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இம்முறை குறைந்த தொகைக்கு குத்தகை வழங்கப்பட்டுள்ள போதும், இந்த ஆண்டு குத்தகைக்கு எடுத்தவர்கள் அதிகளவான வரியினை விதிப்பதாகவும், இதனால் தங்கள் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வியாபாரிகள் கூறுகின்றனர்.

இதேவேளை நேற்று முன்தினம் ஏற்பட்ட இழப்பீட்டினை தர வேண்டும், வரி குறைக்கப்பட வேண்டும், குத்தகைதாரர்களின் அடாவடி நடவடிக்கைகள் முடிவுக்கு வர வேண்டும் எனக் கோரி வியாபாரிகள் நேற்று காலை சந்தை வளாகத்துக்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டபோதும், அதற்குரிய தீர்வு இதுவரை கிட்டப்படவில்லை.

இவ்வாறான சூழ்நிலையில் குத்தகைதாரர்கள் சந்தை வளாகத்தை திறந்து, ‘விரும்பினால் வியாபாரம் செய்யுங்கள், இல்லாவிட்டால் விட்டுவிடுங்கள்’ என்று கூறிச் சென்றுள்ளனர்.

அதனை தொடர்ந்து வியாபாரிகள் இன்றைய தினம் தங்களது வியாபார நிலையங்களை திறந்து, வணிக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதோடு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

]