ஐ.நா. பாதுகாப்பு அவையில் புதிதாக இடம்பெற்ற 2 நாடுகள்

79 0

ஐ.நா. பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பு நாடுகளாக 5 நாடுகள் பொறுப்பேற்றுக்கொண்ட நிலையில், அவற்றில் 2 நாடுகள் முதன்முறையாக இந்த வாய்ப்பைப் பெற்றுள்ளன.

ஐநா பாதுகாப்பு அவையில் சீனா, பிரான்ஸ், ரஷ்யா, இங்கிலாந்து, அமெரிக்கா ஆகிய 5 நாடுகள் வீட்டோ அதிகாரத்துடன் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்த அவையில் 10 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக இடம் பெறும் நடைமுறை உள்ளது. தற்காலிக உறுப்பு நாடுகளின் பதவிக்காலம் 2 ஆண்டுகள். ஒவ்வொரு ஆண்டும் 5 நாடுகள் தற்காலிக உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் 2 ஆண்டுகளுக்கு முன்பு ஐ.நா. பாதுகாப்பு அவையில் உறுப்பு நாடுகளாக தேர்ந்தெடுக்கப்பட்ட இந்தியா, அயர்லாந்து, கென்யா, மெக்சிகோ, நார்வே ஆகிய நாடுகளின் பதவிக்காலம் டிசம்பர் 31ம் தேதியுடன் முடிவடைந்தது. இதையடுத்து, இந்த 5 நாடுகளுக்கு மாற்றாக புதிதாக 5 நாடுகள் உறுப்பு நாடுகளாக ஐ.நா. பொது அவையால் கடந்த ஆண்டு ஜூன் மாதம் ஒருமனதாக தேர்வாகின. அவ்வாறு தேர்வான ஈக்வடார், ஜப்பான், மால்டா, மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து ஆகிய 5 நாடுகள் நேற்று பொறுப்பேற்றுக்கொண்டன.

ஐநா பாதுகாப்பு அவையின் அனைத்து உறுப்பு நாடுகளின் தூதர்கள் முன்னிலையில், இந்த 5 நாடுகளின் தூதர்கள் தங்கள் நாட்டு தேசியக் கொடியை ஐநா பாதுகாப்பு அவையில் ஏற்றும் பாரம்பரிய நிகழ்வு நேற்று நடைபெற்றது. மொசாம்பிக், ஸ்விட்சர்லாந்து ஆகிய இரு நாடுகளும் முதல்முறையாக ஐ.நா. பாதுகாப்பு அவையில் இடம் பெற்றுள்ளன. ஐநா பாதுகாப்பு அவையில் தங்கள் நாட்டின் கொடியை ஏற்றியது வரலாற்றுச் சிறப்பு மிக்க தருணமாக உணர்ந்ததாக அதன் தூதர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.

ஐ.நா. பாதுகாப்பு அவையில் கடந்த ஆண்டு உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அல்பேனியா, பிரேசில், கபான், கானா, ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் பதவிக்காலம் அடுத்த ஆண்டு நிறைவடைய இருக்கிறது. ஐ.நா. பொது அவையில் 193 நாடுகள் இடம் பெற்றுள்ளன. 1946ம் ஆண்டு தோற்றுவிக்கப்பட்ட ஐ.நா. பாதுகாப்பு அவையில் 60 நாடுகள் இதுவரை ஒருமுறைகூட தற்காலிக உறுப்பினராக இருந்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.