விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் ஒரு மாவீரன் என்று இலங்கையின் இராணுவத் தளபதிகளே போற்றுமளவில் விடுதலைப் புலிகள் அமைப்பும் அதன் தலைமையும் இருந்ததென்பது மறுக்க முடியாத உண்மை.
தமிழினம் பற்றி இந்த உலகம் நினைக்கவும் சிந்திக்கவும் தலைப்பட்டமைக்கு விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனே காரணம் என்றால் அதை அவரின் எதிரியும் மறுக்க மாட்டார் என்பதே உண்மை.
ஆக, எதிரிகளும் மெச்சுகின்ற ஒரு தேசியத் தலைவராக பிரபாகரன் இருந்தார் என்பதை எவரும் மறுதலிக்க முடியாது.
இதைக் கூறும்போது, விடுதலைப் புலிகள் அமைப்பின் அத்தனை நகர்வுகளும் மிகவும் சரியானது. அதை எவரும் விமர்சிக்க முடியாது என்பது பொருளல்ல.
ஓர் அமைப்பு என்றால் அந்த அமைப்பு எடுத்த தீர்மானங்கள், தீட்டிய திட்டங்கள் சில வேளைகளில் யதார்த்தத்துக்கு பொருத்த மற்றதாகவும் இருக்கும் என்பது ஏற்புடையதே.
பாரத தேசத்துக்கு விடுதலையைப் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் சிற்பி ஜின்னா ஏமாற்றினார் என்றும் இந்திய தேசத்தின் மீது பாகிஸ்தான் போர் தொடுக்க முற்படும்போதெல்லாம் மகாத்மா காந்தி விட்ட தவறே இந்திய தேசத்துக்கு ஆயுத அச்சுறுத்தலை தருவதாகக் குறைபடுவோரும் உளர்.
அதற்காக பாரத பூமிக்கு சுதந்திரம் பெற்றுக் கொடுத்த மகாத்மா காந்தியின் தியாகத்தை மறந்து விடவோ மறைத்து விடவோ முடியாது என்பது உண்மை.
இந்த வகையில்தான் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் முன்னெடுத்த விடுதலைப் போராட்டம்; அதைக் கட்டிக்காத்த நுட்பம்; பேராளிகளின் ஒழுக்கநெறி; நிர்வாகக் கட்டமைப்பு; ஆயுத பலம்; தாக்குதல் திறன் என இவையனைத்தும் வியப்புக்குரியவை.
இந்த விடயங்களை தனிப்பட்ட காழ்ப்புணர்வு கொண்டு கீழ் நிலைப்படுத்துவதோ அன்றி அதற்கு மாசு கற்பிப்பதோ அழகல்ல.
அதிலும் இச்செயலை தமிழர்கள் குறிப்பாக விடுதலைப் புலிகளால் இழப்புக்களைச் சந்தித்தவர்கள் கூட, சொல்லமாட்டார்கள் என்று கூறுவதில் தவறில்லை.
ஏனெனில் விடுதலைப் புலிகளால் இழப்புக்களைச் சந்தித்தவர்களும் இலங்கை ஆட்சியாளர்களின் ஈனச் செயல்களாலேயே தமிழ் இளைஞர்கள்ஆயுதம் ஏந்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானார்கள் என்பதை ஏற்றுக் கொள்வர்.
இதன்காரணமாக அவர்களும் விடுதலைப் புலிகள் என்ற அமைப்புத் தேவை என்பதுடன் ஒத்துப் போவார்கள் என்பதே நிதர்சனம்.
நிலைமை இதுவாக இருக்கையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க் கட்சித் தலைவருமான இரா.சம்பந்தர் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையொன்றில் விடுதலைப் புலிகள் அமைப்பைக் கீழ்நிலைப்படுத்தும் வகையில் உரையாற்றியிருப்பது மிகப்பெரும் வேதனைக்குரியது.
தற்போதைய ஆட்சியை நல்லாட்சி என்று கூறுவதற்கு அவர் விரும்புவாராக இருந்தால் அதனை மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சியுடன் ஒப்பீடு செய்து நல்லாட்சி என்று பேச வேண் டுமே தவிர விடுதலைப் புலிகள் அமைப்புடன் ஒப்பிட்டுப் பேசுவதென்பது தமிழினத்துக்குச் செய்கின்ற அநீதியாகும்.
இதைவிடுத்து பேச வேண்டிய தேவைகள் இருந்தால் தியாகங்களைச் கொச்சைப்படுத்தாமல் பேசுங்கள்.
இல்லை பேசுவோம் என்றால் புலிகள் இருந்த போதும் பேசியிருக்கலாமே. அவர்கள் இல்லாத போது அவர்களைத் தூற்றுவது கோழைத் தனமல்லவா? என்று கூறுவதில் தவறில்லை.
நன்றி – வலம்புரி ஆசியர் தலையங்கம் (24-02-2017)