ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி,சுதந்திர மக்கள் சபை ஆகிய அரசியல் தரப்புக்களுடன் கூட்டணி அமைத்து உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
கூட்டணி தொடர்பான உத்தியோகபூர்வ அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என இலங்கை மேலவை கூட்டணியின் ஆலோசகர் பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
புதிய அரசியல் கூட்டணி தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட தீர்மானித்துள்ளோம்.இதற்கமைய ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,சுதந்திர மக்கள் சபை ஆகிய அரசியல் தரப்பினருடன் பொதுச் சின்னத்தின் போட்டியிட தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மூன்று அரசியல் தரப்பினர் ஒன்றிணைந்து கூட்டணி அமைக்கும் போது ஒரு தலைமைத்துவத்தை அடிப்படையாக கொண்டு செயல்படுவது முரண்பாடுகளை தோற்றுவிக்கும் என்ற காரணத்தினால் மூன்று தரப்பினர்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் தலைமைத்துவ சபை என்பதொன்றை ஸ்தாபிக்கும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.
கூட்டணியின் அதிகாரம் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி,சுதந்திர மக்கள் சபை மற்றும் இலங்கை மேலவை கூட்டணி ஆகிய தரப்பிற்கு இடையில் இணையாக பகிர யோசனை முன்வைக்கப்பட்டது.
இந்த யோசனைகளை அடிப்படையாக கொண்டு பொது சின்னத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் அரசியல் கூட்டணி அடுத்த வாரம் ஸ்தாபிக்கப்படும் என்றார்.