மாகாண சபை தேர்தலை பிற்போட்ட நல்லாட்சி அரசாங்கத்தின் உறுப்பினர்கள் தான் தற்போது உள்ளூராட்சி மன்றத் தேர்தல் குறித்து அக்கறை கொண்டுள்ளார்கள்.கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராக உள்ளோம்.
ஏனைய அரசியல் கட்சிகளை விட பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம்.சந்திரசேன தெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன காரியாலயத்தில் புதன்கிழமை (ஜன.04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு கருத்துரைக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.வேட்பு மனுத்தாக்கல் செய்ததன் பின்னர் தேர்தலை பிற்போட அரசாங்கம் முயற்சித்துள்ளதாக எதிர்க்கட்சியினர் குறிப்பிடுகின்றமை அடிப்படையற்றது.
தேர்தலை பிற்போட்ட அரசியல் பின்னணி ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்திற்கு உண்டு.நல்லாட்சி அரசாங்கம் மாகாண சபை தேர்தல் முறையில் திட்டமிட்ட வகையில் சிக்கல்களை ஏற்படுத்தியது.மாகாண சபை தேர்தலை நடத்த முடியாத நிலை தற்போது காணப்படுகிறது.
நல்லாட்சி அரசாங்கம் தான் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 8 ஆயிரமாக அதிகரித்தது. உள்ளூராட்சி மன்றங்களின் உறுப்பினர் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள போது அதற்கு நல்லாட்சி அரசாங்கத்தில் அங்கம் வகித்த ஐக்கிய மக்கள் சக்தியினர் தற்போது எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.
கட்சி என்ற ரீதியில் தேர்தலுக்கு தயாராகியுள்ளோம். வேட்புமனு தாக்கலுக்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.ஏனைய அரசியல் கட்சிகளை காட்டிலும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அதிகளவான உள்ளூராட்சி மன்றங்களை கைப்பற்றும் என்றார்.