அரசாங்கத்திற்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்

136 0

பொருளாதார குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் ரணில் -ராஜபக்ஷ ஆட்சியை விரட்டியடிப்போம் எனும் தொனிப்பொருளில் நேற்றைய தினம் கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக மக்கள் போராட்ட இயக்கத்தினால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.  இதன்போது போராட்டக்காரர்களால்  மின் கட்டண அதிகரிப்பு, புதிய வரி அறவீடு, பயங்கரவாத தடைச்சட்டம் எதிர்ப்பு தெரிவித்தும் மற்றும் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்டவர்களை விடுதலை செய்யுமாறு கோரி இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டிருந்தது

இதன்போது மக்கள் போராட்ட இயக்கத்தின் செயற்பாட்டாளர் சுஜித் குருவிட்ட கருத்து தெரிவிக்கையில்,

பொருளாதாரக் குற்றத்திற்கான இழப்பீட்டை மக்கள் மீது திணிக்கும் அரசாங்கத்திற்கு எதிராக நாம் இன்று வீதிக்கு இறங்கியுள்ளோம். இது அரசாங்கத்திற்கு விடுக்கும் அபாய எச்சரிக்கையாகும். இன்று நாட்டில் பெற்றோர்கள் பிள்ளையை பாடசாலைக்கு அனுப்ப முடியாததொரு நிலைமையில் உள்ளனர். பாடசாலைக்கு தேவையான உபகரணங்களை கொள்வனவு செய்ய முடியாத நிலை காணப்படுகிறது. பிள்ளைகள் உண்பதற்கு கூட வழியில்லாத நிலை காணப்படுகிறது.

புது வருடத்தில் முன்னெடுத்துள்ள இந்த போராட்டம் வெறும் ஆரம்பமாகும்.  இந்த போராட்டங்கள் நாடளாவிய ரீதியில் நடைபெறுவதற்கு உள்ளன. ஆகவே ரணில் ராஜபக்ஷ தங்களுடைய பொருட்களை தயாராக வைத்துக் கொள்ளுங்கள். வீட்டிற்கு செல்ல தயாராகுங்கள். மக்களாணை இன்றி ஆட்சி அதிகாரத்தில் இருந்தது போதும். நாம் உங்களுக்கு  வழங்கிய காலம் போதும். மேலும் மேலும் நாட்டு மக்களை துன்பத்தில் தள்ளாமல் பொருளாதார சுமையை அப்பாவி மக்கள் மீது சுமத்தாமல் அவர்களை நெருக்கடிக்களுக்குள் தள்ளிவிடாமல் அனைவரும் வீடு செல்லுங்கள். நீங்கள் செல்லவில்லை என்றால் உங்களுக்கு எதிராக மக்களை ஒன்று திரட்ட நாம் தயார்.

அப்பாவி மக்களை பொருளாதார நெருக்கடிகளுக்குள்  தள்ளி அதற்கு எதிராக குரல் கொடுக்கும் தரப்பினர்களின் மீது சட்டத்தை பிரயோகித்து பயங்கரவாத தடை சட்டங்களை அமுல் படுத்தி ஒடுக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.  பாதாள குழு தலைவர் கஞ்சிபானை இம்ரானுக்கு பிணைச் செல்ல அனுமதித்து விட்டு மக்களுக்காக போராடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் செயற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட தரப்பினர்களை சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும் பல்வேறு சட்டங்களை உருவாக்கி அவர்களை தடுத்து வைத்துள்ளனர். அரசாங்கத்தின் இது மாதிரியான மோசமான செயற்பாடுகள் மற்றும் மக்களை ஒடுக்கும் செயற்பாடுகள்,  பொருளாதார நெருக்கடிகளுக்கு எதிராகவும் நாடளாவிய ரீதியில் இது போன்ற ஆர்ப்பாட்டங்களை தொடர்ச்சியாக முன்னெடுத்து செல்வோம் என்பதை கூறிக் கொள்ள விரும்புகிறேன் என்றார்.