சஹ்ரானின் மைத்துனரான அன்சார் உட்பட மூவருக்கு பிணை வழங்கியது நீதிமன்றம்!

101 0

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில்  கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்படாத  மேலும் மூன்று பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

சஹ்ரானின் மனைவி பாத்திமா ஹாதியாவின் சகோதரரான மொஹம்மட் அன்சார் உள்ளிட்ட மூவரே இவ்வாறு சட்ட மா அதிபரின் ஒப்புதலுடன் பிணையில் செல்ல மாவனெல்லை நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

ஏற்கனவே இவ்விவகாரத்தில் இரண்டு, மூன்று வருடங்களாக விளக்கமறியலில் இருந்துவந்த  வழக்குத் தொடரப்படாத 13  பேர்,  கடந்த 2022 மே 4 ஆம் திகதி மாவனெல்லை நீதிவான் தம்மிக ஹேமபாலவினால் விடுவிக்கப்பட்டனர்.

அத்துடன் அப்போது மேலும் 7 பேரை பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார். சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய இந்த உத்தரவுகளை பிறப்பித்த நீதிவான், விசாரணைகள் நிறைவடையாத 10 பேரின் விளக்கமறியல் காலத்தை மட்டும் நீடித்து உத்தரவிட்டார்.

இவ்வாறான நிலையிலேயே  கடந்த திங்களன்று (2) இந்த விவகாரத்தில் விளக்கமரியலில் இருந்து வந்த  சஹ்ரானின் மைத்துனரான அன்சார், பெண்ணொர்டுவர் உள்ளிட்ட மூவரை பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில் 46 பேர் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டனர்.

அந்நபர்களில் 16 பிரதிவாதிகளுக்கு எதிராக மட்டும் கேகாலை மேல் நீதிமன்றில்  வழக்கு தொடரப்பட்டுள்ள நிலையில்,  தற்போது அவ்வழக்கு நெளபர் மெளலவி மற்றும் சாஜித் மெளலவி ஆகியோருக்கு எதிராக மட்டும் நடக்கிறது. அவ்விசாரணைகள் எதிர்வரும் ஜனவரி 10 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.

குறித்த வழக்கு சப்ரகமுவ மாகாண  மேல் நீதிமன்றில் (கேகாலை) நீதிபதி  ஜகத் கஹந்தகமகே தலைமையிலான  ஜயகி டி அல்விஸ் மற்றும்  இந்திகா காலிங்கவங்ச ஆகிய நீதிபதிகள் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற அமர்வு  முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுகின்றது.

மாவனெல்லை பகுதியில் புத்தர் சிலை தகர்ப்பு விவகாரத்தில்  கைது செய்யப்பட்டு, வழக்குத் தொடரப்பட்ட 16 பிரதிவாதிகளில் மூவரை வழக்கிலிருந்து விடுவித்த சப்ரகமுவ மாகாண மேல் நீதிமன்றின் (கேகாலை) மூவர் கொண்ட நீதிபதிகள் அமர்வு (ட்ரயல் அட் பார்) மேலும் 11 பேருக்கு 7 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 3 மாத கால சிறைத் தண்டனையை அளித்து கடந்த 2022 ஆகஸ்ட் 10 ஆம் திகதி  தீர்ப்பளித்தது. குறித்த வழக்கில் பயங்கரவாத தடை சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுக்களை  விலக்கிக்கொள்ள சட்ட மா அதிபர்  இணங்கிய நிலையில், தண்டனை சட்டக் கோவையின் கீழ் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டினை, விரைவான விடுதலை கருதி 11 பிரதிவாதிகள் ஏற்றுக்கொண்ட நிலையிலேயே அவர்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

குற்றச்சாட்டுக்களை   8 ஆவது பிரதிவாதியாக பெயரிடப்பட்டுள்ள அபூ செய்த் எனும்  மொஹம்மட் இப்ராஹீம் நெளபர் மெளலவி, 9 ஆவது பிரதிவாதியான அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி ஆகியோர் ஏற்றுக்கொள்ள மறுத்த நிலையில், அவ்விருவருக்கு எதிராக மட்டும் குறித்த வழக்கு விசாரணை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.