உயிர்த்த ஞாயிறு தினமான கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்கள் குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளுக்கும் பிணையளிப்பதா இல்லையா என்பது குறித்த தீர்மானத்தை, சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்றம் நாளை ( 05) அறிவிக்கவுள்ளது.
இன்று ( 04) இந்த விவகாரம் குறித்த வழக்கு இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பிலான விவகாரத்தை விசாரிக்கவென நியமிக்கப்பட்டுள்ள, கொழும்பு மேல் நீதிமன்றின் தலைமை நீதிபதி தமித் தொடவத்த தலைமையில் மேல் நீதிமன்ற நீதிபதிகளான அமல் ரணராஜ மற்றும் நவரத்ன மாரசிங்க ஆகியோர் அடங்கிய சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற குழாம் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதன்போதே இது அறிவிக்கப்பட்டது.
நேற்று முன்தினம் (ஜன. 2) இவ்வழக்கு விசாரணைக்கு வந்த போது கடந்த 2022 நவம்பர் 24ஆம் திகதி, சிறப்பு ட்ரயல் அட்பார் நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தேசிய உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரால் சுரேஷ் சலே மன்றில் ஆஜரானார்.
எனினும் தேசிய பாதுகாப்பு தொடர்பிலான கற்கைகள் நிலையத்தின் முன்னாள் பணிப்பாளர் நாயகமும், பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகவும் செயற்பட்டிருந்த பேராசிரியர் ரொஹான் குணரத்ன வெளிநாட்டில் இருப்பதால் மன்றில் ஆஜராகவில்லை என அறிவிக்கப்பட்டது.
குறித்த இருவரும் வழக்குத் தொடுநர் தரப்பின் முதலிரண்டு சாட்சியாளர்களாவர். இவர்கள் இருவரையும் வழக்குத் தொடுநர் தரப்பு, விஷேட நிபுணத்துவ சாட்சியாளர்களாக பெயரிட்டுள்ளது.
எனினும் வழக்கு விசாரணைகளிடையே, குறித்த இருவரையும் சாட்சியாளர்களாக பெயரிட்டுள்ளமை குறித்து குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்கள் சார்பில் ஆட்சேபனை முன்வைக்கப்பட்டது.
குறிப்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள நெளபர் மெளலவி உள்ளிட்டோருக்காக ஆஜராகும் சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப் இது தொடர்பில் திறந்த மன்றில் கேள்வி எழுப்பினார்.
‘ கனம் நீதிபதிகளே, முதல் இரு சாட்சியாளர்களையும் குறுக்கு விசாரணை செய்ய அவர்களின் சாட்சியம் குறித்த எந்த ஆவணங்களும் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்கப்படவில்லை. அப்படியாயின் அவர்களை எப்படி குறுக்கு விசாரணை செய்வது? அவர்கள் எப்படி சாட்சியமளிக்க முடியும் ?’ என கேள்வி எழுப்பினார்.
இதற்கு வழக்குத் தொடுநருக்காக ஆஜராகும் மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, குறித்த இருவரும் விஷேட நிபுணத்துவ சாட்சியாளர்கள் என பதிலளித்தார்.
எனினும் அதற்கு மேலதிக விளக்கத்தை முன் வைத்த சிரேஷ்ட சட்டத்தரணி ருஷ்தி ஹபீப், அவ்விருவரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்து விசாரித்த ஜனாதிபதி விசாரணை ஆணைக் குழுவில் சாட்சியம் அளித்துள்ளதாகவும், அத்துடன் தனது சேவை பெறுநரான நெளபர் மெளலவி உள்ளிட்ட பலரை தடுப்புக் காவலில் வைத்து விசாரித்துள்ளதாகவும் கூறினார்.
அப்படி இருக்கையில் அவர்கள் எப்படி விஷேட நிபுணத்துவ சாட்சியாளர்களாக, எந்த ஆவணமும் பிரதிவாதிகள் தரப்புக்கு வழங்கப்படாது சாட்சியமளிக்க முடியும் என அவர் கேள்ள்வி எழுப்பினார். அது நியாயமான வழக்கு விசாரணைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது, மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஹரிப்பிரியா ஜயசுந்தர, பிரதிவாதிகள் தரப்புக்கு அவசியமான ஆவணங்கள் ஏதும் இருப்பின் அது தொடர்பில் தமக்கு அறிவித்தால், முடியுமானால் அவற்றை பெற்றுத்தர முடியும் என குறிப்பிட்டார்.
இந் நிலையுல், தேவையான ஆவணங்களை பட்டியலிட்டு அறிவிக்குமாறும் அதன் பிரதியை நீதிமன்ற வழக்கேட்டிலும் இணைக்குமாறும் நீதிபதிகள் பிரதிவாதிகளின் சட்டத்தரணிகளுக்கு ஆலோசனையளித்தனர்.
இதனிடையே, இந்த வழக்கு விசாரணைகளை தற்போதைக்கு ஆரம்பிக்க முடியாத நிலையே இருப்பதாக சுட்டிக்காட்டிய நீதிபதிகள் விசாரணைக்கு என குறிக்கப்பட்டிருந்த (5) திகதியை சாதாரண வழக்கு தினமாக மாற்றி, பிணை குறித்த உத்தரவை அறிவிப்பதாக அறிவித்தனர்.
கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த நிலையில், நீதிமன்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது. பொலிசாரும் பொலிஸ் விஷேட அதிரடிப் படையினரும் குவிக்கப்பட்டிருந்தனர்.
குறிப்பாக வழக்கு விசாரணைக்கு வந்த கொழும்பு மேல் நீதிமன்றின் முதலாம் இலக்க விசாரணை அறைக்குள் மூன்றாம் தரப்பினர் உள் நுழைய அனுமதியளிக்கப்படவில்லை. நீதிமன்ற செய்தியாள்ர்கள் உள்ளிட்ட அனைவருமே சோதனை செய்யப்பட்ட பின்னரேயே நீதிமன்றுக்குள் அனுமதிக்கப்பட்டனர்.
இந் நிலையில், இந்த விவகாரத்தில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 25 பிரதிவாதிகளும் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், மெகஸின், அங்குணகொலபெலஸ்ஸ, மஹர, நீர்கொழும்பு, போகம்பறை உள்ளிட்ட பல சிறைச்சாலைகளில் இருந்து அவர்கள் 24 பேர் அழைத்து வரப்பட்டனர்.
நீதிமன்றில் 14 ஆவது பிரதிவாதி ஆஜர் செய்யப்படாத நிலையில், அவர் சுகயீனம் காரணமாக சிகிச்சை பெறுவதாக அறிவிக்கப்பட்டது.
இந் நிலையில், இன்று அவர் தொடர்பில் பூரண மருத்துவ அறிக்கையை மன்றில் முன்னிலைப்படுத்த உத்தரவிட்ட ட்ரயல் அட்பார் நீதிமன்றம், அவருக்கு வழக்கில் ஆஜராக முடியுமா?, எவ்வளவு காலத்தில் அவரது நோயை குணப்படுத்த முடியும், அவரது நோய் நிலைமை வழக்கிற்கு ஆஜராகும் பட்சத்தில் பிறருக்கு பரவக் கூடியதா? போன்ற கேள்விகளுக்கான விடையும் விரிவான அறிக்கையில் இருக்க வேண்டும் என உத்தரவிட்டது.
அத்துடன் 13 ஆவது பிரதிவாதி குறித்த மன நல மருத்துவ அறிக்கையை முன் வைக்கவும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.
நீதிமன்றில் ஆஜரான தேசிய உளவுச் சேவை பிரதானி மேஜர் ஜெனரால் சுரேஷ் சலேவை அவ்வழக்கிலிருந்து தற்காலிகமாக விடுவித்த நீதிமன்றம், அறிவித்தல் கிடைத்தால் மீண்டும் ஆஜராக வேண்டும் என கட்டளையிட்டு வழக்கை 5 ஆம் திகதி வரை ஒத்தி வைத்தது.
இன்றையதினம் மன்றில் பிரதிவாதிகளுக்காக ஜனாதிபதி சட்டத்தரணி அனுர மெத்தேகொட, சிரேஷ்ட சட்டத்தரணிகளான என்.எம். சஹீட் , ருஷ்தி ஹபீப் , சட்டத்தரணிகளான ஜி.கே. கருனாசேகரவும், விஜித்தாநந்த மடவலகம, சுரங்க பெரேரா, ரிஸ்வான் உவைஸ் , அசார் முஸ்தபா, இம்தியாஸ் வஹாப், சச்சினி விக்ரமசிங்கவும் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
சட்ட மா அதிபர் சார்பாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரால் ஜனாதிபதி சட்டத்தரணி ஹரிப்பிரியா ஜயசுந்தரவின் தலைமையில் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் சுதர்ஷன டி சில்வா, சஜித் பண்டார உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் ஆஜராகினர்.
பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணி மனுஷிகா குரே உள்ளிட்ட சட்டத்தரணிகள் ஆஜராகினர்.
வழக்குத் தொடரப்பட்டுள்ள பிரதிவாதிகள்:
1.அபூ செய்த் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் மொஹம்மட் நெளபர் அல்லது நெளபர் மெளலவி 2.அபூ ஹதீக் எனப்படும் கபூர் மாமா அல்லது கபூர் நாநா எனும் பெயரால் அறியப்படும் மொஹம்மட் சரீப் ஆதம் லெப்பை
3. அபூ சிலா எனப்படும் ஹயாத்து மொஹம்மது மில்ஹான்
4. அபூ உமர் எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாதிக் அப்துல்லாஹ்
5. அபூ பலா எனப்படும் மொஹம்மட் இப்ராஹீம் சாஹித் அப்துல் ஹக்
6.அபூ தாரிக் எனப்படும் மொஹம்மட் அன்வர் மொஹம்மட் ரிஸ்கான்
7. அபூ மிசான் எனப்படும் மொஹம்மட் மன்சூர் மொஹம்மட் சனஸ்தீன்
8. அப்துல் மனாப் மொஹம்மட் பிர்தெளஸ்
9. அபூ நஜா எனப்படும் மொஹம்மட் ரமீஸ் மொஹம்மட் சாஜித் அல்லது சாஜித் மெளலவி
10. ஷாபி மெளலவி அல்லது அபூ புர்கான் எனப்படும் அப்துல் லதீப் மொஹம்மட் ஷாபி
11. ஹுசைனுல் ரிஸ்வி ஆதில் சமீர்
12.அபூ தவூத் எனப்படும் மொஹம்மட் சவாஹிர் மொஹம்மட் ஹசன்
13. அபூ மொஹம்மட் எனப்படும் மொஹம்மட் இப்திகார் மொஹம்மட் இன்சாப்
14. ரஷீத் மொஹம்மட் இப்றாஹீம்
15.அபூ ஹினா எனப்படும் மொஹம்மட் ஹனீபா செய்னுள் ஆப்தீன்
16.அபூ நன் ஜியார் எனப்படும் மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ஹாரிஸ்
17. யாசின் பாவா அப்துல் ரவூப்
18. ராசிக் ராசா ஹுசைன்
19.கச்சி மொஹம்மது ஜெஸ்மின்
20.செய்னுல் ஆப்தீன் மொஹம்மட் ஜெஸீன்
21. மொஹம்மட் முஸ்தபா மொஹம்மட் ரிஸ்வான்
22.அபூ சனா எனப்படும் மீரா சஹீட் மொஹம்மட் நப்லி
23. மொஹம்மட் அமீன் ஆயதுல்லாஹ்
24.மொஹம்மட் அன்சார்தீன் ஹில்மி
25. மொஹம்மட் அக்ரம் அஹக்கம்