தேர்தலுக்காக ஒதுக்கப்படும் நிதியை விவசாயத்துறை அமைச்சிற்கு வழங்கினால், விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும்.
எனவே தேர்தலை ஓரிரு மாதங்களுக்கு ஒத்தி வைத்து , விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு முன்னுரிமையளிக்குமாறு விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர வலியுறுத்தினார்.
புதன்கிழமை (ஜன.04) விசேட அறிக்கையொன்றை வெளியிட்டு இதனைத் தெரிவித்துள்ள அவர் அதில் மேலும் குறிப்பிட்டதாவது:
இம்முறை பெரும்போகம் 7 இலட்சம் ஹெக்டயாரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த போகத்தில் 5 இலட்சம் ஹெக்டயாரில் நெற் செய்கை மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இம்மாத்தில் அறுவடையை மேற்கொள்ள முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் எமக்குள்ள பிரதான பிரச்சினை நிதியைப் பெற்றுக் கொள்வதாகும்.
கடந்த அறுவடையின் போது விவசாயிகளுக்கு வழங்கிய வாக்குறுதியை எமக்கு நிறைவேற்ற முடியாத நிலைமை ஏற்பட்டது. நிதி நெருக்கடியின் காரணமாக கடன் வழங்குவதற்கு வங்கிகள் மறுப்பு தெரிவித்தன.
எவ்வாறிருப்பினும் இம்முறை சிக்கல்கள் ஏற்படாத வகையில் விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளார்.
மத்திய வங்கி , நிதி அமைச்சு உள்ளிட்டவற்றுக்கு இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே எமக்கு நிதி கிடைக்கப் பெற்றவுடனேயே, நியாயமான விலையில் விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு நாம் தயாராகவுள்ளோம். இவ்வாறான நெருக்கடிகளுக்கு மத்திலேயே தேர்தலை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திக் கொண்டிருக்கின்றன.
தேர்தல் ஆணைக்குழு தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா செலவாகும் என மதிப்பிட்டுள்ளது. வேட்பாளர்களின் செலவுகளுடன் இந்த தொகை 40 பில்லியன் வரை அதிகரிக்கக் கூடும்.
இந்த நிதியை எமக்கு வழங்கினால் விவசாயிகளிடமிருந்து நியாயமான விலையில் எம்மால் நெல்லைக் கொள்வனவு செய்ய முடியும். எனவே தேர்தலை விட விவசாயிகள் உள்ளிட்ட சாதாரண மக்களின் நிலைமை தொடர்பில் எதிர்க்கட்சிகள் சிந்திக்க வேண்டும்.
நாம் தேர்தலை காலம் தாழ்த்தும் தரப்பினர் அல்ல. எனினும் உள்ளுராட்சிமன்றத் தேர்தல் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தும் தேர்தல் அல்ல. எனவே நெல் கொள்வனவிற்கு முன்னுரிமையளித்து , ஓரிரு மாதங்களுக்கு தேர்தலை காலம் தாழ்த்துவது காலத்திற்கு ஏற்ற தீர்மானமாகும். அரசியல் கட்சிகளே தேர்தலைக் கோருகின்றனவேயன்றி மக்கள் அதனைக் கோரவில்லை.
எனவே விவசாயிகளிடமிருந்து நெல்லைக் கொள்வனவு செய்வதற்கு முன்னுரிமையளிக்குமாறு ஜனாதிபதியிடமும் அமைச்சரவையிடமும் கோரிக்கை விடுத்திருக்கின்றேன் என்றார்.