வறிய குடும்பங்களை சேர்ந்தவர்களிடம் சட்டவிரோதமான முறையில் சிறுநீரகத்தை பெற்றுக்கொண்ட வழக்கின் பிரதான சந்தேக நபர் நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர், கொழும்பு மேலதிக நீதிவான் திருமதி. ரஜீந்திர ஜயசூரிய முன்னிலையில் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக அடையாளம் காணப்பட்டுள்ள இவர், கடந்த நவம்பர் மாதம் 27ஆம் திகதி நாட்டை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக விமான நிலையம் தகவல் வெளியிட்டுள்ளதாகவும், அதற்கமைய அவரை கைதுசெய்வதற்கான விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவு நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பித்துள்ளது.
அத்துடன் பொரளை பிரதேசத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் இந்த சிறுநீரக கடத்தல் இடம்பெற்றுள்ளதாகவும், வைத்தியசாலையில் பணி புரியும் மூன்று ஊழியர்கள் சந்தேக நபர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.