நியாயமானதும் நாகரிகமானதுமான தேர்தல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு தேர்தல் செலவுகளை ஒழுங்குமுறை செய்யும் சட்ட வரைவை பயன்படுத்தவும் என்று சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் தலைவர் கரு ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பில் அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
ஒழுங்குமுறைப்படுத்தி, சுதந்திரமானதும் நியாயமானதுமான தேர்தல் கலாசாரத்தை உருவாக்குவதற்கு பாராளுமன்றத்தில் சட்ட வரைவொன்றை முன்வைத்திருப்பது தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் என்ற வகையில் எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்.
அதேபோன்று மேற்படி சட்ட வரைவை நிறைவேற்றிக்கொள்வதன் ஊடாக நாம் எதிர்பார்க்கும் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு இவ்விடயம் தொடர்பில் எழுந்துள்ள விமர்சனங்களையும் கருத்தில்கொண்டு, சட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை மேலும் வலியுறுத்துகிறோம்.
இலங்கையின் அரசியல் கலாசாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் மேற்கொள்ளும் செலவுகள் மற்றும் அதற்காக நிதி திரட்டும் விதம் சட்டத்துக்கு உட்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
அதற்கான சட்டத்தை உருவாக்குவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே கருதுகின்றோம்.
அதற்கமைய இந்த சட்டத்தை நிறைவேற்றிக்கொள்வதன் ஊடாக உள்ளூராட்சி மன்ற தேர்தல், மாகாண சபை தேர்தல், பாராளுமன்ற தேர்தல் மற்றும் ஜனாதிபதி தேர்தலுக்கு போட்டியிடும் வேட்பாளர்களினால் மேற்கொள்ளப்படும் செலவினங்களை ஒழுங்குமுறைப்படுத்துவதற்கு இவ்விடயம் பெரிதும் உதவும்.
மேலும், சர்வஜன வாக்கெடுப்பையும், இதற்கு உள்ளடக்கி அரசியல் கட்சிகளும் குழுக்களும் மேற்கொள்ளும் செலவுகளையும் இந்த சட்ட வரைவுக்கு உட்படுத்த வேண்டும் என்பது எமது நம்பிக்கையாகும்.
மேலும், தேர்தல் பிரச்சார மற்றும் ஏனைய செலவுகளின் ஊடாக வாக்காளர்களுக்கு அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும் விதத்திலான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் எதிர்பார்க்கின்றோம்.
அதற்கமைய, ஏதேனும் ஒரு வேட்பாளருக்கு ஏதேனும் ஒரு தரப்பு பணத்தை செலவு செய்தால், குறிப்பிட்ட வேட்பாளரின் அல்லது கட்சியின் முன் அனுமதி பெறுவதை உறுதிசெய்ய வேண்டியுள்ளது.
மேலும், ஆரம்ப சட்ட வரைவில் காணப்பட்ட அனைத்து வேட்பாளர்களும் தனது செலவுகளை குறிப்பிட்ட வங்கிக்கணக்கின் ஊடாக செலவு செய்ய வேண்டும் என்ற பரிந்துரை இருந்தாலும், தற்போதுள்ள சட்ட வரைவில் அது உள்ளடங்காதது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
வெளிநாட்டு நிதி உதவிகளை பெறும் இலங்கையில் நிறுவப்பட்டிருக்கும் அமைப்புகள் மற்றும் கம்பெனி சட்டத்தின் கீழ் தொண்டு நிறுவனங்களாக பதிவு செய்யப்பட்டிருக்கும் அல்லது பாராளுமன்ற சட்டங்களின் ஊடாக நிறுவப்பட்டிருக்கும் அமைப்புகளிடம் இருந்தும் தேர்தல்களின்போது நிதி திரட்ட முடியாத விதத்தில் சட்டங்களை உள்ளடக்குவது உகந்தது என்பதே எமது கருத்தாகும்.
இவ்விடயம் தொடர்பில் செயல்படும் அனைத்து தரப்புகளையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் பாராட்டுகிறது.
மேலும், தேர்தல்கள் ஆணைக்குழு மற்றும் இலங்கையின் தேர்தல் கண்காணிப்பு அமைப்புகள் பல ஒன்றிணைந்து தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்திருக்கும் பரிந்துரைகளையும் கவனத்தில் கொண்டு இலங்கையில் தேர்தல் செலவினங்களை ஒழுங்குமுறைப்படுத்தும் வெற்றிகரமான சட்டத்தை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.