மாற்றத்துக்காக போராடியவர்கள் அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தலைமையிலான தேசிய எல்லை நிர்ணய குழுவினை இன்று (ஜன. 4) புதன்கிழமை இரா.சாணக்கியன் சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டிருந்தார்.
அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு பகிரங்கமாக அழைப்பு விடுத்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கூறுகையில்,
மாற்றத்தினை கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தற்போது ஜனநாயக ரீதியாக ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவ்வாறு அவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினை அவர்கள் சரியான முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் அனைவரும் ஆர்வமாக இந்த தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
அரசாங்கத்தில் இருக்கும் சிலர் நிதி இல்லை என கூறும் நொண்டிச் சாட்டுகள் தொடர்பில் கரிசனை செலுத்தாமல், அனைவரும் தேர்தலுக்கு தயாராக வேண்டும்.
அதேபோன்று உள்ளூராட்சி நிறுவனங்களின் வட்டார எல்லை நிர்ணயத்தை மேற்கொள்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரியவிடம் மேலும் பல விடயங்கள் தொடர்பில் நாம் பேசியிருந்தோம்.
குறிப்பாக, வட்டாரங்களின் எண்ணிக்கையினை குறைக்கும் வகையிலான சில செயற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதற்கு ஆளுந்தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களும் துணை போகும் வகையில் செயற்படுகின்றனர்.
எனினும், மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில், வட்டாரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட வேண்டுமே ஒழிய, குறைக்கப்படக்கூடாது. இவ்விடயத்தினை நாம் இன்றைய தினம் வலியுறுத்தியுள்ளோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.