ஐநா நோக்கிய பேரணியை வலுப்படுத்தவும் , ஐரோப்பிய நாடுகளிடம் நீதிகோரியும் ஐரோப்பிய ஒன்றிய முன்றலில் இருந்து ஐநா நோக்கிய மனிதநேய ஈருருளிப் பயணம் இன்று 24.2.2017 மதியம் 15 மணிக்கு ஆரம்பித்தது.
பெல்ஜியம் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஒழுங்கமைப்பில் பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களின் பங்கேற்புடன் ஐந்து பேர் கொண்ட குழு ஐநா நோக்கிய நீதிக்கான ஈருருளிப் பயணத்தை ஆரம்பித்தனர்.அகவணக்கம் செலுத்தப்பட்டு எம் மண்ணுக்காக மடிந்த மாவீரர்களையும் மக்களையும் நினைவில் ஏந்தி தமிழீழத் தேசியக்கொடி பட்டொளி வீச குளிரான காலநிலையிலும் தமது தேசியக்கடமையை முன்னெடுத்தனர்.பிரான்ஸ், ஸ்ராஸ்புர்க் நகரத்தில் இருந்து இருவரும் மற்றும் இன்றைய ஈருருளிப் பயணத்தில் பெல்ஜியம் வாழ் மூன்று தமிழ் பெண்களும் பங்கெடுத்தது குறிப்பிடத்தக்கது.
இன்று காலையில் ஈருருளிப் பயணத்தை ஆரம்பிப்பதற்கு முன்னர் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் தெற்காசியா பிரிவுகளுக்கான அரசியல் அதிகாரிகளையும் அத்தோடு ஐரோப்பிய கொமிசனின் வெளிவிவகார பிரிவில் இலங்கைக்கான அதிகாரிகளையும் மற்றும் தெற்காசிய பிரிவுகளுக்கான அதிகாரிகளையும் சந்தித்து உரையாடியதோடு ஈருருளிப் பயணம் தொடர்பான மனுவையும் கையளித்தனர்.
மனிதநேய ஈருருளிப்பயணம் எதிர்வரும் நாட்களில் லக்சம்புர்க், யேர்மனி,பிரான்ஸ் இறுதியாக சுவிஸ், ஜெனிவா மாநகரை சென்றடைய உள்ளது .
எமது சுதந்திர விடுதலைப் போராட்டத்துக்கு வலுச்சேர்க்கும் வரலாற்று முக்கியம் வாய்ந்த ஒரு போராட்டமாக எதிர்வரும் போராட்டங்கள் அமைய இருப்பதால்,ஐரோப்பா வாழ் தமிழர்கள் அனைவரும் ஒன்றுபட்டு ஓங்கிக் குரல் கொடுப்பதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 06ஆம் திகதி ஜெனீவா சர்வதேச முச்சந்தியில் முருகதாசன் திடலில் ஒன்றுகூடுவதற்காக தங்களைத் தாயார்ப்படுத்துமாறு மிகவும் அன்போடும் உரிமையோடும் கேட்டுக்கொள்கிறோம்.
பின்வரும் கோரிக்கைகளை வலியுறுத்தியே மனிதநேய ஈருருளிப் பயணம் ஐநா நோக்கி செல்கின்றது :
1.பல தசாப்தங்களாக,இலங்கைத்தீவில் சிங்கள அரசினால் தொடர்ந்து நடத்தப்படும் தமிழினப்படுகொலையை ஆராய்ந்து, ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பங் கீ மூன் அவர்களால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு நீதி கிடைக்கும் பொருட்டு அனைத்துலக குமூகம் அனைத்துலக நீதிமன்றில் விசாரணையை நடாத்தி தமிழ்மக்களுகக்கான நீதியைப் பெற்றுக்கொடுக்க வேண்டும்.
2.ஈழத்தமிழ்த் தேசிய இனத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்திற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களைச் சிறீலங்கா அரசு உடனடியாக விடுதலை செய்வதோடு, தமிழர் தாயகமாகிய இலங்கைத்தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளில் தமிழ்மக்கள் சுதந்திரமாக வாழக்கூடிய விதத்தில் அங்கு ஆக்கிரமித்துள்ள சிங்களப் படைகள் முற்றுமுழுதாக வெளியேற்றப்பட்டு தமிழர்
நிலப்பறிப்பு உடன் நிறுத்தப்பட்டு இயல்பு வாழ்க்கை உருவாக்கப்படவேண்டும்.
3.இலங்கைத் தீவின் வடக்கு கிழக்குப் பகுதிகளை பாரம்பரிய நிலமாகக் கொண்ட தமிழீழ மக்களின் தாயகம், தேசியம், தன்னாட்சி என்பவற்றை ஐக்கிய நாடுகள் அவை (அனைத்துலகம்) அங்கீகரிக்கவேண்டும்.
4.கருத்து வெளிப்பாட்டு மற்றும் ஊடகச் சுதந்திரம் வழங்கப்பட்டு, தமிழீழ மக்கள் தமது அரசியல் அபிலாசைகளை வெளிப்படுத்தக் கூடிய விதத்தில் ஐக்கிய நாடுகள் அவையின் கண்காணிப்பில் தமிழர் தாயகத்தில் சர்வசன வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டும். அதேவேளை புலம்பெயர் தமிழீழ மக்களும் வாக்கெடுப்பில்
கலந்துகொள்ளக் கூடிய வாய்ப்பையும் ஐக்கிய நாடுகள் அவை ஏற்படுத்திக் கொடுக்கவேண்டும்.
5.மூன்று தசாப்தகாலமாக எமது மக்களையும் எமது மரபுவழித் தாயகத்தையும் பாதுகாத்து, அனைத்துலகச் சட்டங்களை மதித்து, நடைமுறை அரசை நிறுவிய எமது விடுதலை இயக்கமான தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பினால் மட்டுமே தொடர்ந்தும் எமது மக்களையும் எமது நிலத்தையும் பாதுகாக்க முடியும். ஆகவே இவ்வமைப்பை எமது விடுதலை இயக்கமாக அனைத்துலக குமூகம்
ஏற்றுக்கொள்ள வேண்டும்.