சட்டவிரோதமாக உள்நாட்டிற்கு வரும் புலம்பெயர்வோர் தொடர்பில் ஒவ்வொரு நாட்டிலும் தீர்மானங்கள் மேற்கொள்ளப்படுவது போன்று, சர்வதேச ரீதியிலும் இணைந்து செயற்பட வேண்டியது முக்கியமானதென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற புலம்பெயர்வோர் சுகாதாரம் தொடர்பான சர்வதேச ஆலோசனை மாநாட்டின் நிறைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து உரையாற்றிய ஜனாதிபதி,
–சட்டபூர்வமாக வருகைதரும் புலம்பெயர்வாளர்கள் நாட்டில் சுகாதார, சமூக, அரசியல் பிரச்சினைகள் பலவற்றை ஏற்படுத்துகின்றனர்.
புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகள் தொடர்பான பிரச்சினைக்கு ஐக்கிய நாடுகள் அமைப்பு, உலக சுகாதார அமைப்பு உள்ளிட்ட அனைத்து நிறுவனங்களும் இப்போது முன்னுரிமை அளித்து செயற்படுவதற்கு இதுவே காரணம்.
வருடாந்த ஐக்கிய நாடுகள் அமைப்பின் மாநாடுகளுக்கு செல்லும் போதும் அதனோடிணைந்த கலந்துரையாடல்களிலும் அகதிகள் மற்றும் புலம்பெயர்ந்தோர் சுகாதாரம் தொடர்பில் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் நான் தனிப்பட்ட கவனம் செலுத்துவதுண்டு.
வெளியிடப்பட்டுள்ள கொழும்பு பிரகடனத்தின் நோக்கங்களை அடைவதற்காக அனைத்து அங்கத்துவ நாடுகளும் பாடுபடுமென நான் நம்புகிறேன்– என்றார்.