காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் கவனயீர்ப்பு போராட்டம் கிளிநொச்சியில் இன்று 5ஆவது நாளாகவும் தொடர்கின்றது.
கிளிநொச்சி மாவட்டத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடுதலையையும் வெளிப்படுத்தலையும் வலியுறுத்தி உறவினர்களால் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போராட்டமானது கடந்த 20ஆம் திகதி காலை கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
போராட்டம் தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள்,
நீண்ட காலமாக வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவினர்களின் விடுதலைக்காக பல போராட்டங்களை நடத்தியிருந்தோம்,
அரசியல்வாதிகள், அமைச்சர்கள், கட்சித் தலைவர்கள், என பலரும் காலத்திற்கு காலம் பல்வேறு உறுதிமொழிகள் மற்றும் வாக்குறுதிகளை வழங்கினர்.
ஆனால் இதுவரை எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை,
எல்லோரையும் நம்பி நாம் ஏமாந்துவிட்டோம் அல்லது ஏமாற்றப்பட்டு விட்டோம்.
எனவேதான் நாங்கள் எங்களுக்கான நிரந்தர தீர்வை எதிர்பார்த்து தொடர் கவனீய்ர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளோம்.– எனத் தெரிவித்துள்ளனர்.
இன்று 5ஆவது நாளாகவும் தொடரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் போராட்டத்திற்கு பலரும் ஆதரவு தெரிவித்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.