திமுகவினர் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் – நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தல்

143 0

நாடாளுமன்ற தேர்தல் வெற்றிக்காக பாஜக எதையும் செய்ய தயாராக இருக்கும் என்பதால், திமுகவினர் இணைந்து ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கட்சி அணிகள், குழுக்களின் நிர்வாகிகள் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

திமுகவில் உட்கட்சி தேர்தல்கள் முடிந்த நிலையில், அமைப்பு சார்ந்த அணிகளின் நிர்வாகிகள் சமீபத்தில் நியமிக்கப்பட்டனர். இதுதவிர ஏற்கெனவே இருந்த 21 அணிகளுடன், அமைப்புசாரா ஓட்டுநர் அணி, விளையாட்டு மேம்பாட்டு அணி என புதிதாக 2 அணிகள் உருவாக்கப்பட்டு, அணிகளின் தலைவர்கள், செயலாளர்களும் நியமிக்கப்பட்டனர். இது மட்டுமின்றி, ஆதிதிராவிடர் உரிமைகள் குழு, உயர்நிலை செயல்திட்ட குழு உட்பட 11 குழுக்களும் திமுகவில் உள்ளன.

இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அணிகளின் நிர்வாகிகள், குழுக்களின் தலைவர்கள், உறுப்பினர்களின் ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் அரங்கில் நேற்று நடந்தது.இதில், பொதுச் செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, தலைமை நிலையச் செயலாளர் கே.என்.நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பங்கேற்றனர்.

உதயநிதி கோரிக்கை: கூட்டத்தில், இளைஞர் அணி உள்ளிட்ட அனைத்து அணிகளின் நிர்வாகிகளும் பேச அனுமதிக்கப்பட்டனர். அப்போது பேசிய, இளைஞர் அணி செயலாளரும், அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், ‘‘இளைஞர் அணி சார்பில் மாநாடு நடத்த அனுமதி அளிக்க வேண்டும். அணி நிர்வாகிகள் நியமனத்தில் மாவட்டச் செயலாளர்கள் தலையிடக் கூடாது. நியமனம் தொடர்பாக அணிகளின் நிர்வாகிகளுக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும்’’ என்றார்.

இதேபோல, பல அணிகளின் நிர்வாகிகளும் தங்களது கோரிக்கைகளை தெரிவித்தனர். தொடர்ந்து,முக்கிய நிர்வாகிகள் பேசினர்.

பின்னர், முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: அணிகளில் நிர்வாகிகளாக 450-க்கும் மேற்பட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். பொறுப்பை பெருமையாக கருதி, ‘லெட்டர் பேடு’ மட்டும் போட்டுவிட்டு ஒன்றும் செய்யாமல் இருந்துவிட கூடாது. களப்பணி மிகவும் முக்கியம். எந்த நிகழ்வானாலும், அனைத்து அணியினரும், மாவட்டச் செயலாளருடன் இணைந்து செயல்பட வேண்டும். மாவட்டச் செயலாளர்களும் அணியினரை அரவணைத்துசெல்ல வேண்டும். நிகழ்ச்சிகளில் அணி நிர்வாகிகளின் பெயர்களையும் இடம்பெறச் செய்ய வேண்டும். அணிகளுக்கான மாவட்ட நிர்வாகிகளாக, தகுதியானவர்களை நியமிக்க வேண்டும்.

தேர்தலுக்கு தயாராக வேண்டும்: நாடாளுமன்ற தேர்தலுக்கு இப்போதிருந்தே தயாராக வேண்டும். தேர்தல் வெற்றிக்காக பாஜகஎதையும் செய்ய தயாராக இருக்கும். அதை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும். பாஜக தெரிவிக்கும் குற்றச்சாட்டுகளுக்கு, சரியான பதில் அளிக்க வேண்டும்.

அரசின் திட்டங்கள், திமுகவின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். அனைவரும் ஒத்துழைப்புடன் செயல்பட்டால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி நிச்சயம். இவ்வாறு முதல்வர் பேசினார்.

இதைத் தொடர்ந்து, செய்தித்தொடர்பாளர் குழு கூட்டம் அதன் செயலாளர் டிகேஎஸ் இளங்கோவன் தலைமையில் நடந்தது. பின்னர், செய்தியாளர்களிடம் இளங்கோவன் கூறும்போது, ‘‘திமுகவின் கொள்கைகள், தமிழர் வாழ்வியல் போன்றவற்றை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கான வழிகாட்டுதல்கள், நிர்வாகிகளின் செயல்பாடுகள் குறித்து அறிவுறுத்தல் வழங்கவே இக்கூட்டத்தை முதல்வர் நடத்தினார். பாஜக வருகைக்கு பிறகு, சமத்துவத்தை பாதுகாக்கும் பணி திமுகவுக்கு உள்ளது. எனவே, பாஜகவின் பொய்பிரச்சாரத்தை தடுப்பது குறித்தும் ஆலோசனை வழங்கினார். குஜராத்தில் உள்ள 2 பணக்காரர்களுக்கு நடுவில் தரகராக செயல்பட்டு வரும் பாஜக, அவர்களுக்கு பொதுத்துறை நிறுவனங்களை விற்பனைசெய்யும் பணியிலும் ஈடுபட்டு வருகிறது. ஆனால், திமுகவை குடும்பக் கட்சி என்று விமர்சிக்கிறது’’ என்றார்.

படைக்கலன் ஆயத்தமாகட்டும்: முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவில், ‘சமத்துவம், சமூகநீதி, பகுத்தறிவு வாயிலாக முற்போக்கான சமுதாயத்தை கட்டமைக்கும் நமது கடமையை நிறைவேற்றவும், சாதி – மதஏற்றத் தாழ்வுகளை வலிமைப்படுத்தி ஆதிக்கத்தை நிறுவத் துடிக்கும் பிற்போக்கு சக்திகளிடம் இருந்து நாடு, மக்களை காக்கவும் நமது வலிமைமிகு படைக்கலன்கள் ஆயத்தமாகட்டும்!’ என்று தெரிவித்துள்ளார்.

அணிகளை கண்காணிக்க பொறுப்பாளர் நியமனம்: பொறுப்பாளர்களை நியமித்து, கட்சியின் 23 அணிகளின் செயல்பாடுகளையும் கண்காணிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, இளைஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி உள்ளிட்டவற்றுக்கு அமைச்சர் ஐ.பெரியசாமியும், மகளிர் அணி, தொண்டர் அணி, மாணவர் அணி உள்ளிட்டவற்றுக்கு கனிமொழி எம்.பி.யும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதர அணி பொறுப்பாளர்களாக அமைச்சர் பொன்முடி, ஆ.ராசா நியமிக்கப்பட்டுள்ளனர். அணிகளின் மாவட்ட நிர்வாகிகள் நியமனம் உள்ளிட்டவற்றை இவர்கள் கண்காணிக்க வேண்டும் என்றும் இக்கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.