பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இவ்வேளையில் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நயவஞ்சக அரசியல் இலக்குகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என லிபரல் சகோதரத்துவம் என்ற அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இது தொடர்பில் அவ் அமைப்பினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
அண்மைக்காலமாக எமது இயக்கம் உட்பட பல இளைஞர் அமைப்புக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்களைப் பயன்படுத்தி, காலிமுகத்திடல் போராட்ட களம் குறித்து சில கருத்துக்களை வெளியிட்டு போலியான செய்தி ஒன்று பரவி வருகின்றது.
காலி முகத்திடல் போராட்ட வலயத்தை பண்டிகை வலயமாக மாற்றக்கூடாது என்ற இந்த அறிவிப்பை ஒரு இயக்கமாக நாங்கள் ஆதரிக்கவில்லை என்பதையும், காலி முகத்திடல் போராட்ட வலயத்தை ஒரு சுற்றுலா வலயமாக மாற்றுவதன் மூலமாக அதிக அந்நிய செலாவணியை நாட்டிற்கு கொண்டு வருவதில் எங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என்பதையும் தெளிவுபடுத்த விரும்புகிறோம்.
நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள முயற்சிக்கும் இவ்வேளையில் நாட்டில் ஸ்திரமற்ற நிலையை உருவாக்கி மக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் நயவஞ்சக அரசியல் இலக்குகளை ஒருபோதும் ஆதரிக்க மாட்டோம் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம். மேலும் அத்தகைய போராட்டத்திற்கான எவ்வித தேவையும் இவ்வேளையில் இல்லை.
இத்தகைய கேவலமான அரசியல் தந்திரங்களுக்கு எங்கள் இயக்கத்தின் பெயரையும் சின்னத்தையும் பயன்படுத்துவதை வன்மையாகக் கண்டிக்கிறோம். இதுபோன்ற செயல்களுக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.