மிதக்கும் ஆலைக்கு டாலர்களை செலுத்தி மின்சாரம் வாங்கத் திட்டம்

142 0

மின்சார நெருக்கடியை அடிப்படையாக கொண்டு அவசர மின்சார கொள்வனவின் கீழ் மின்சாரத்தை பெற்றுக்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

அதன்படி, வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்ட மின் உற்பத்தி கப்பல் மூலம் மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கான ஆயத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூட்டமைப்பின் அழைப்பாளர் ரஞ்சன் ஜெயலால் தெரிவித்துள்ளார்.

மின் உற்பத்தி கப்பலில் இருந்து மின்சாரம் வாங்கினால் அதற்கு டாலரில் பணம் செலுத்த வேண்டும் என்றும், இதற்கு முன்பும் இதே முறையில் டாலர் கொடுத்து கப்பலில் இருந்து மின்சாரம் பெறும் முயற்சிகள் நடந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாடு காரணமாக நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் ஒரு இயந்திரம் செயலிழந்துள்ளதாகவும், எதிர்வரும் நாட்களில் மற்றுமொரு இயந்திரம் செயலிழக்க நேரிடலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நிலக்கரி தட்டுப்பாட்டுக்கு தீர்வாக திருகோணமலை துறைமுகத்திற்கு நிலக்கரியை கொண்டு வந்து அங்கிருந்து கன்டெய்னர் லொறிகள் மூலம் நுரைச்சோலைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பாரிய வர்த்தகர் ஒருவருக்கு போக்குவரத்து பணிகள் வழங்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.திருகோணமலையில் இருந்து நுரைச்சோலைக்கு போக்குவரத்துக்கு அதிக பணம் செலவாகும் எனவும், அந்த பணத்தில் டீசல் அல்லது எரிபொருளை வாங்கி எரிபொருள் ஆலைகளை இயக்க முடியும் எனவும் ரஞ்சன் ஜெயலால் மேலும் தெரிவித்தார்.