ஆதரவற்ற மாணவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள்

122 0

மாகொல முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு  நிலையத்தின் மல்வானை கிளையின் பாடசாலையை தனியாருக்கு வழங்கி, ஆதரவற்ற மாணவர்களின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிகள் இடம்பெறுவதாக கூறப்படும் விவகாரம் தொடர்பில், பல்வேறு தரப்புக்களுடன் பேச்சு வார்த்தைகள் நடாத்தப்பட்டுள்ளன.

சட்டத்தரணிகள், சமூக ஆர்வளர்கள், அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை குழுவினர் உள்ளிட்டோருடன் ஏற்கனவே சந்திப்புக்கள் நடாத்தப்பட்டிருந்த நிலையில்,  கொழும்பு மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளத்தின் தலைவர் சிரேஷ்ட சட்டத்தரணி சிராஸ் நூர்தினுடனும் விஷேட சந்திப்பொன்று நடாத்தப்பட்டுள்ளது.

மாகொல முஸ்லிம்  சிறுவர் மேம்பாட்டு  நிலையத்தின் பழைய மாணவர் சங்கத்தின் குழுவினர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவரை இவ்வாறு சந்தித்து, கொழும்பு மாவட்டத்தில் வாழும் ஆதரவற்ற முஸ்லிம் சிறுவர்களுக்கான கல்வி உள்ளிட்ட வசதிகளை மாகொல முஸ்லிம்  சிறுவர் மேம்பாட்டு  நிலையத்தின் ஊடாக வழங்குவது தொடர்பிலும்,  குறித்த நிலையத்தின் வழங்களை ஆதரவற்ற சிறுவர்களின் நலனுக்காக மட்டும் பயன்படுத்துவதை உறுதி செய்ய பூரண ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வது குறித்தும் கலந்துரையாடியுள்ளனர்.

கடந்தவாரம் இச்சந்திப்பு நடைபெற்றதாக மாகொல முஸ்லிம்  சிறுவர் மேம்பாட்டு  நிலைய பழைய மாணவர்ச் அங்கத்தின் செயலாளர் எஸ்.ஏ.சி.எம். முனவ்வர் குறிப்பிட்டார்.

இந் நிலையில் மாகொல முஸ்லிம் சிறுவர் மேம்பாட்டு மைய நிர்வாக சபையுடன் இன்று (28) விஷேட கலந்துரையாடல் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

ஆதரவற்ற முஸ்லிம் சிறுவர்களின் கல்விச் சொத்தை பாதுகாக்கும் பொருட்டு தலையீடு செய்யக்கோரி 6 கோரிக்கைகளை முன்வைத்து ஏற்கனவே வக்பு சபையிலும்  முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாகொல முஸ்லிம்  சிறுவர் மேம்பாட்டு நிலைய பழைய மாணவர்கள் 5 பேர்  இணைந்து இந்த முறைப்பாட்டினை முன் வைத்துள்ளனர்.

முஸ்லிம் சமய கலாசார திணைக்களத்தின் பணிப்பாளரை விழித்து முன் வைக்கப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில், மாகொல முஸ்லிம் அநாதைகள் இல்லத்தின் சொத்துக்கள் மற்றும் அதன் பாதுகாப்புக்காக வக்பு சபை தலையீடு செய்ய வேண்டும் என்பது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1983 ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க சட்டம் ஊடாக மாகொல முச்லிம் அநாதைகள் இல்லம் பாராளுமன்றில் இணைப்பு சட்டம் ஊடாக  கூட்டிணைக்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் தலையீடு செய்ய வக்பு சபைக்கு உள்ள சட்ட ரீதியிலான அதிகாரத்தை மையப்படுத்தி இந்த முறைப்பாடு செய்யப்பட்டதாக முறைப்பாட்டாளர்களில் ஒருவரான பழைய மாணவர் சங்க செயலாளர்  எஸ்.ஏ.சி.எம். முனவ்வர் குறிப்பிட்டார்.