மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் அதிகரிக்கும் எவ்வித யோசனைகளும் ஆணைக்குழுவிற்கு இதுவரை முன்வைக்கப்படவில்லை.
மின்கட்டணத்தை அதிகரிக்கும் அதிகாரம் யாருக்கு உள்ளது என்பதை நாட்டு மக்கள் விரைவில் அறிந்துக் கொள்வார்கள் என இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்தார்.
மின்கட்டண அதிகரிப்பு தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முழுமையான மின்கட்டணத்திற்கு இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்காத காரணத்தினால் தான் தற்போது இரண்டரை மணித்தியாலங்கள் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது என மின்சார சபை குறிப்பிட்டுள்ளமை நிராகரிக்கத்தக்க கருத்தாகும்.
நாட்டு மக்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்பட்டுள்ளார்கள். மின்கட்டண அதிகிப்பு தொடர்பில் இலங்கை மின்சார சபை முன்வைத்த பரிந்துரையை முழுமையாக அமுல்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கவில்லை. அனுமதி வழங்கியிருந்தால் நாட்டில் பிறிதொரு போராட்டம் தோற்றம் பெற்றிருக்கும்.
எதிர்வரும் ஜனவரி மாதம் மீண்டும் மின்கட்டணத்தை அதிகரிக்க மின்சாரத்துறை அமைச்சு அவதானம் செலுத்தியுள்ளது.
மின்கட்டணத்தை 65 சதவீதத்தால் அதிகரிக்கும் யோசனை இதுவரை இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவிற்கு கிடைக்கப் பெறவில்லை
இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் யாப்பு சட்டத்திற்கமைய நியாயமான முறையில் மின்கட்டணத்தை திருத்தம் செய்வது தொடர்பில் அவதானம் செலுத்தலாம்.
மின்கட்டணம் 65 சதவீதம் அல்ல 100 சதவீதம் அதிகரித்தால் கூட மக்களால் அதனை செலுத்த முடியாத நிலையே தற்போது சமூக கட்டமைப்பில் காணப்படுகிறது.
அனைத்து சேவைகளும் மக்களுக்காகவே முன்னெடுக்கப்படுகிறது. நாட்டு மக்களை நெருக்கடிக்குள்ளாக்கி எந்த சேவை துறையையும் சிறந்த முறையில் முன்னெடுத்துச் செல்ல முடியாது என்பதை அரசியல் தரப்பினர் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும் என்றார்.