திருமலை தளவாய் நில அபகரிப்புக்கு தீர்வு என்ன ?

106 0

சிறுபான்மை சமூகம் மீதான திணிப்பு தொடர்ந்த வண்ணமே இருக்கிறது இதில் மிக முக்கியமானதாக நில அபகரிப்பும் ஒன்றாகும்.

திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேச எல்லைக்குட்பட்ட உப்பாறு கிராம சேவகர் பிரிவில் உள்ள கிராமமே தளவாய் என்ற சிறிய கிராமம் இந்த கிராமத்தில் தமிழ், முஸ்லிம் போன்றவர்கள் வாழ்ந்து வந்த நிலையில் அம் மக்களுக்கு சொந்தமான நிலங்களை வனஜீவராசிகள் திணைக்களத்தினர் அபகரித்துள்ளதாக அம்மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இம் மக்கள் தளவாய் கிராமத்தில் 1986 தொடக்கம் 1990 வரை வாழ்ந்த வாக்காளர் இடாப்பில் பதிவு செய்யப்பட்ட ஆதாரங்கள் இருக்கின்றன.

70 குடும்பங்கள் அன்றைய பதிவில் பதிவாகியிருந்துள்ளமை தெரியவருகிறது ஆனாலும் வனஜீவராசி திணைக்களம் பலவந்தமாக யானை வேலி அமைத்து தங்களது நிலம் என எல்லையிடப்பட்ட நிலை காணப்படுகிறது.

இக் கிராமத்தில் சுமார் 2500 க்கும் மேற்பட்ட நிலபரப்பரப்பை கொண்ட விவசாய செய்கைக்கு உகந்த பூமியாக காணப்படுகிறது.

இந்த கிராமத்தில் தற்போது மக்கள் அங்கிருந்து 1990 களில் யுத்த நிலை காரணமாக இடம் பெயர்ந்து சுமார் 30 வருடங்களாக காணியை இழந்த நிலையில் வாழ்ந்து வருகின்றனர்

இந்த அபகரிப்பின் மூலம் விவசாயம், மேட்டு நிலப் பயிர்ச் செய்கை என வாழ்வாதாரமும் இழக்கப்பட்டுள்ளது.

வெளியேற்றப்பட்ட மக்கள் கிண்ணியாவின் பல பிரதேசங்களில் வாழ்ந்து வந்த நிலையில் 1994 களில் குறித்த கிராமத்துக்கு மீள் குடியேற சென்ற போது இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன் மீளக்குடியேற விடாது இரானுவத்தினர் தடுத்தனர்.

இற்றை வரை சொந்த காணியை இழந்த நிலையில் காணி வீடின்றி வாடகை வீடுகளிலும் இன்னோரன்ன வீடுகளிலும் கிண்ணியாவிலேயே வாழ்ந்து வருகின்றார்கள். இம் மக்களின் நில அபகரிப்பு தொடர்பில் பல முறை தங்கள் அடிப்படை உரிமைகள் பற்றி பல அரசியல்வாதிகள், உரிய உயரதிகாரிகளிடத்தில் கோரிக்கை மூலமான தகவல்களை தெரியப்படுத்திய போதும் ஊமை கண்ட கனவாக அப்படியே அடக்கி விடப்பட்டு வெறும் ஏமாற்றம் மாத்திரமே எஞ்சியுள்ளது.

எந்த அரசாங்கம் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதிலும் சிறுபான்மை சமூகம் மீதான அடக்கு முறை தொடர்ந்த   வண்ணமே இருக்கிறது. இதன் ஒரு பகுதியாக வட கிழக்கில் பெரும்பாலும் மக்களின் தனியார் நில அபகரிப்பு என்பது புதிதல்ல.

இம் மக்களின் அன்றைய ஆரம்ப காலம் தொட்டு வாழ்ந்த காணிக்கான ஆவணங்கள் இருந்த போதிலும் 2004ல் ஏற்பட்ட சுனாமி ஆழிப்பேரலை மூலமாக இதற்கான சான்றுகள் நீரால் அடித்துச் செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

இது ஒரு மீள்குடியேற்ற கிராமமாக இருந்த போதிலும் மக்களின் இடப் பெயர்வினால் சொல்லென்னா துயரங்களை எதிர் கொண்ட நிலையில் சொந்த காணியை பெற முடியாத நிலைக்கு தள்ளப்பட்ட இம் மக்களுக்கான தீர்வினை பெற்றுக் கொடுப்பது யார் ?

தேசிய உற்பத்தியில் வருமானமீட்டக்கூடிய வகையில் விவசாய உற்பத்திகளை இங்கு மேற்கொள்ள முடியும் தற்போது வனஜீவராசி திணைக்கள கட்டுப்பாட்டுக்குள் இருப்பதனால் யாரும் அங்கு செல்ல முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதுடன் இதனை அண்டிய பகுதிகளில் மண் அகழ்வு இடம் பெற்று வருவதுடன் இயற்கையை அழிக்கும் அளவுக்கு அந்த நிலம் மாறி வருகின்றது .

இதற்கான தீர்வினை குறித்த மக்கள் வேண்டி நிற்கின்றனர் ஆனால் அது வெற்றியடையவில்லை தொடர் உரிமை போராட்டமாக எஞ்சியுள்ளது .

குறித்த மக்களுக்கான பதில் காணியோ நிரந்தர வாழ்வாதார திட்டங்களோ வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கின்றனர் . இவர்களின் கோரிக்கைகளாக உரிய பகுதியில் மீள் குடியேற்றம் செய்யப்பட வேண்டும், வாழ்வாதார உதவிகள், காணிக்கான  ஆவணங்கள் போன்றவற்றை சீராக திறம்பட செய்து தருமாறும் கோரிக்கை விடுக்கின்றனர்.

காலா காலமாக திருகோணமலை மாவட்டத்துக்கு மக்கள் பிரதிநிதிகள் சிறுபான்மை சமூகம் சார்பில் இருந்தாலும் இவ்வாறான விடயங்கள் மறைக்கப்பட்டே வருகின்றன இந்த நிலைமாறி இம் மக்களின் தலைவிதிதை தீர்மானிக்கும் சக்தியாக மாற வேண்டும்.

நில அபகரிப்பை தடுத்தி நிறுத்தி தனியார் நிலங்கள் உரியவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் . நாட்டின் தற்போதைய நிலையில் பல கஷ்டங்களுக்கு மத்தியில் அன்றாட ஜீவனாம்சத்துக்கு போதுமான வருமானமின்றி தினக்கூலித் தொழிலாளிகளாக வாழ்ந்து வருகின்றனர் .

இந்த நிலை மாறி இவ்வாறாக பலவந்தமாக அபகரிக்கப்பட்ட விவசாய காணிகளை இவர்களுக்கு கையளிக்க இந்த அரசாங்கம் முன்வர வேண்டும் அப்போது தான் அம்மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுன் இதில் இருந்து உழைத்து வாழக் கூடிய நிலை ஏற்படும்.

இது தொடர்பில் சமூக ஆய்வாளர் எம்.எம்.நசுருதீன் தெரிவிக்கையில்

“கடந்த காலங்களில் தளவாய் காணி தொடர்பில் ஆய்வினை மேற்கொண்டுள்ளோம் அம்மக்கள் சொந்த காணியின்றி ஏமாற்றப்பட்டு அக்காணியை வனஜீவராசி திணைக்களத்தினர் கையகப்படுத்தியுள்ளனர் விவசாய பூமியான இப்பகுதி உரிய மக்களுக்கு சொந்தமாக வழங்கப்படல் வேண்டும் மக்களை ஏமாற்றும் நிலை தான் தற்போது இருந்து வருகின்றது”  என்றார்.

மக்களுடைய சொந்த பூமியாக இருந்த போதிலும் நிலங்களை சூரையாடுவது அரச துறையினரின் அடாவடி நிலையை மேற்கொண்டு வருகின்றன.

இவ்வாறான திணைக்களங்களே திருமலை மாவட்டத்தை பொறுத்தமட்டில் சிறுபான்மை இன சமூகத்தை திட்டமிட்டபடி தொல்பொருள் என்ற போர்வையிலும் இது போன்று பல அடாத்தான நில அபகரிப்பிலும் நில அளவீடுகளிலும் அத்துமீறிய   வண்ணம் முன்னெடுக்கின்றனர் .

இது தொடர்பில் மக்கள் கரிசனை கொண்டு தங்களது உரிமைகளை வென்றெடுக்க பல முறை முயற்சிக்கின்ற போதும் உரிய துறையினர் மக்கள் பிரதிநிதிகள் கண்கொண்டு பார்ப்பதில்லை .

நில ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்த துப்பில்லாத நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் சுகபோகங்களை மாத்திரமே கவனிக்கின்றனர். கோத்தபாய அரசின் கீழ் கடந்த காலங்களில் 20 ம் திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தவர்களில் ஒருவர் சிறுபான்மை நாடாளுமன்ற உறுப்பினரான அவர் இந்த மாவட்டத்தை சேர்ந்தவரே ஆனாலும் மக்களின் இவ்வாறான நில ஆக்கிரமிப்பு தொடர்பில் எவ்வித முயற்சியும் மேற்கொள்ளவும் இல்லை அதனை மீளப்பெற்றுக்கொடுக்க நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் நிலத்துக்கு சொந்தமானவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

மக்களின் நலன் கருதி உரிர நிலம் உரிய மக்களுக்கு கிடைக்க நிரந்தர தீர்வு எப்போது கிட்டும் என மக்களின் ஏகோபித்த முடிவாக இருக்கின்றது.