போக்சோ மற்றும் சிறார் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை போலீஸார் எப்படி கையாள வேண்டும்என்பது குறித்த அறிவுறுத்தல்களை வழங்க, சிறப்பு அமர்வு ஏற்படுத்துவது தொடர்பாக உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு நீதிபதிகள் பரிந்துரைத்துள்ளனர்.
சிதம்பரத்தில் 12-ம் வகுப்பு மாணவி ஒருவருக்கு சக மாணவர் தாலி கட்டும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது. அதையடுத்து அந்த மாணவரை கைது செய்த போலீஸார், மாணவியை அரசு காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், போலீஸார் மற்றும் மாவட்ட சிறார் நல குழுமத்தின் செயல்பாடுகளுக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இதுதொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், என்.ஆனந்த் வெங்கடேஷ் அமர்வு, போக்சோ மற்றும் சிறார் குற்றங்களை போலீஸார் கையாளுவது குறித்து புதிய விதிகளை வகுக்க வேண்டும் என அறிவுறுத்தினர். மாணவிக்கு தாலி கட்டியது தொடர்பாக போலீஸார் பதிவு செய்திருந்த வழக்கு விசாரணையை கடலூர் சிறார் நீதிக்குழும விசாரணைக்கு மாற்றினர்.
மேலும், போக்சோ மற்றும் சிறார் குற்றங்கள் தொடர்பான வழக்குகளை போலீஸார் எப்படி கையாள வேண்டும் என்பது குறித்த அறிவுறுத்தல்களை உத்தரவாக பிறப்பிக்க வேண்டியிருப்பதால், இதற்காக சிறப்பு அமர்வை ஏற்படுத்தவும் பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்துள்ளனர்.