கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டையொட்டி தமிழகத்தில் பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், உதகையில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர்.
உதகையிலுள்ள தங்கும் விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் உள்ள அறைகள் நிரம்பி வழிகின்றன. உதகை தாவரவியல் பூங்காவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் நேற்று வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது. உதகையில் நேற்று சாரல் மழையுடன் நிலவிய பனிமூட்டமான காலநிலையை ரசித்தபடி, சுற்றுலா பயணிகள் படகு சவாரி செய்தனர். இதேபோல, தொட்டபெட்டா மலைச்சிகரத்தில் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்திருந்தது.
தேயிலை பூங்கா, ரோஜா பூங்கா, பைன்பாரஸ்ட், சூட்டிங்மட்டம், பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். உதகை நகர சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 3 நாட்களில் மட்டும் உதகை தாவரவியல் பூங்காவை சுமார் 30 ஆயிரம் பேர் கண்டு ரசித்துள்ளனர்.