ஐக்கிய தேசிய கட்சியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியாது. உள்ளூராட்சிமன்றத் தேர்தல் முடிவுகள் ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும் என்பதற்காகவே அரசாங்கம் தேர்தலை காலம் தாழ்த்த முயற்சித்துக் கொண்டிருப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் திங்கட்கிழமை (டிச. 26) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித் த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போதைய ஜனாதிபதி, அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் வேட்பாளராகப் போட்டியிடுவாரானால் ஒரு வருடத்திற்கு முன்னரே அவரால் தேர்தலை நடத்த முடியும்.
அதாவது 2023 நவம்பருக்கு முன்னர் தேர்தலை நடத்த முடியும். அவ்வாறு தேர்தலை நடத்துவதாயின் அதற்கு இன்னும் சில மாதங்களே காணப்படுகின்றன.
எனவே வேறு எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கே அவர் முயற்சிக்கின்றார். உள்ளுராட்சிமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை 4000ஆகக் குறைக்கவுள்ளதாகக் கூறிக் கொண்டிருக்கின்றார்.
இதற்குக் காரணம் உள்ளூராட்சிமன்றத் தேர்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு வெற்றியளிக்கும் தேர்தலாக அமையாது.
ஐக்கிய தேசிய கட்சியும் , ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஒன்றிணைந்து தேர்தலில் போட்டியிட்டால் நிச்சயம் வெற்றி பெற முடியாது.
அவ்வாறான முடிவுகள் அடுத்த ஜனாதிபதித் தேர்தலிலும் தாக்கம் செலுத்தும். எனவே தான் உள்ளூராட்சிமன்றத் தேர்தலை காலம் தாழ்த்துவதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
எவ்வாறிருப்பினும் தேர்தலைக் காலம் தாழ்த்தும் எந்தவொரு முயற்சிக்கும் ஐக்கிய மக்கள் சக்தி இடமளிக்காது. எனவே விரைவில் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
தேர்தல் உரிய நேரத்தில் நடத்தப்பட்டால் மாத்திரமே ஸ்திரமான அரசாங்கத்தை உருவாக்க முடியும். நாட்டில் ஸ்திரமான அரசாங்கம் தோற்றம் பெற்றால் மாத்திரமே வெளிநாடுகளின் உதவிகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்றார்.