உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சிறந்த தரப்பினருக்கு மாத்திரம் வேட்பு மனுக்களை வழங்குமாறு சகல அரசியல் கட்சிகளிடம் வலியுறுத்தவுள்ளோம்.
ஊழல்வாதிகளை புறக்கணிக்கும் அதிகாரம் வாக்குரிமை ஊடாக நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஆகவே நாட்டு மக்கள் அந்த அதிகாரத்தை முறையாக பயன்படுத்த வேண்டும் என பெப்ரல் அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் ரோஹன ஹெட்டியராச்சி தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் வினவிய போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
உள்ளூராட்சி மன்றத் தேர்தலை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி மாதம் 20ஆம் திகதிக்கு முன்னர் நடத்த தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளமை வரவேற்கத்தக்கது.
தேர்தலை பிற்போட அரசாங்கம் ஏதேனும் வழிமுறைகளை முன்னெடுத்தால் நீதிமன்றத்தை நாடுவோம் என்பதில் எவ்வித மாற்றமுமில்லை.
8800 ஆக இருக்கும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் எண்ணிக்கையை 5100 ஆக குறைக்கும் திட்டம் சிறந்தது. புதிய எல்லை நிர்ணய அறிக்கைக்கு அமைய உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவதாக இருந்தால் மேலும் ஆறு மாத காலத்திற்கு அதிகமாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பிற்போட வேண்டிய நிலை ஏற்படும் என எல்லை நிர்ணய குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார். ஆகவே நடைமுறையில் உள்ள தேர்தல் முறைக்கு அமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை நடத்துவது சிறந்ததாக அமையும்.
உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிட சிறந்த தரப்பினருக்கு மாத்திரம் வேட்புமனுக்களை வழங்குமாறு அனைத்து அரசியல் கட்சிகளிடமும் வலியுறுத்தவுள்ளோம். அரசியல் கட்டமைப்பு தொடர்பில் மக்கள் மத்தியில் சிறந்த நிலைப்பாடு கிடையாது,மக்களின் நம்பிக்கையை வெற்றிக் கொள்ளும் வகையில் அரசியல் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட வேண்டும்.
ஊழல்வாதிகளை புறக்கணிக்கும் அதிகாரம் நாட்டு மக்களுக்கு வாக்குரிமை ஊடாக வழங்கப்பட்டுள்ளது,அந்த அதிகாரத்தை மக்கள் முறையாக பயன்படுத்த வேண்டும். தவறான தரப்பினரை தெரிவு செய்தால் அதன் விளைவை அடுத்த தேர்தல் இடம்பெறும் வரை எதிர்கொள்ள நேரிடும். மக்களாணைக்கு முரணாக செயற்படும் அரசியல்வாதிகளை மீளழைக்கும் அதிகாரம் தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுக்கு உரித்தாகப்பட வேண்டும் என்பதை தேர்தல் முறைமை தொடர்பான குழுவிடம் வலியுறுத்தியுள்ளோம் என்றார்.