இலங்கையில் தான் மேலும் தங்கியிருக்கவேண்டிய நிலையேற்படலாம் என ஸ்கொட்லாந்தை சேர்ந்த புளொக்கர் கெய்லே பிரேசர் அச்சம் வெளியிட்டுள்ளார்.
அரகலய குறித்த பதிவுகளிற்காக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு இலங்கை அதிகாரிகளால் கடவுச்சீட்டு பறிமுதல் செய்யப்பட்ட ஸ்கொட்லாந்தை சேர்ந்த பெண்ணே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
விசா விதிமுறைகளை மீறியதாக தெரிவித்து இலங்கையின் குடிவரவுதுறை அதிகாரிகள் கெய்லே பிரேசரின் கடவுச்சீட்டை பறிமுதல் செய்துள்ளனர்.
நீதிபதிகள் அவரின் ஆவணங்களை வழங்கவேண்டும் என உத்தரவு பிறப்பிக்க மறுத்துள்ளதை தொடர்ந்து உயிர் அச்சம் காரணமாக கெய்லெ பிரேசர் இலங்கைக்குள் தலைமறைவாக உள்ளார்.
அடுத்த வருடம் ஜூலை மாதம் முதல் இவரது விவகாரத்தை ஆராயப்போவதில்லை என இலங்கையின் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடியிலிருந்து விடுபடுவதற்கான இறுதி முயற்சியாக கெய்லே பிரேசர் இலங்கையில் உள்ள பிரிட்டிஸ் தூதரகத்;தை தொடர்புகொண்டுள்ளார்.
எனினும் இராஜதந்திரிகள் கடவுச்சீட்டை கையளிக்குமாறு அழுத்தம் கொடுக்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
கெய்லேயின் சட்டசிக்கல் மேலும் ஆறு மாதங்கள் நீடிக்கலாம் என்பதால் தான் இலங்கையில் சிக்குண்டுள்ளதாக தெரிவித்துள்ள அவர் வெளியில் தலைகாட்டினால் தான் கைதுசெய்யப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளார்.
எனது மனித உரிமைகள் முற்றாக புறக்கணிக்கப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
நான் இங்கிருந்து செல்லவேண்டும்,என்னை அவர்கள் விடுகின்றார்கள் இல்லை ,என்னிடம் பணம் இல்லை என்னிடம் எதுவுமில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
பிரிட்டிஸ் அரசாங்கம் தனக்கு உதவவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.