போதைப்பொருள் வியாபாரிகளை நத்தார் தாத்தா வேடத்தில் முற்றுகையிட்ட பொலிஸ் அதிகாரிகள்

128 0

பெரு நாட்டின் பொலிஸ் அதிகாரிகள், நத்தார் தாத்தா வேடத்தில் சென்று போதைப்பொருள் வியாபாரிகள் குழுவொன்றைக் கைது செய்துள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பெருவின் தலைநகர் லீமாவின் புறநகர் பகுதியான சுர்குய்லோவில் அண்மையில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று நத்தார் தாத்தா மற்றும் அவரின் உதவியாளர்கள் போன்று வேடமணிந்து வீதியில் பரிசுகளை வழங்கியவாறு சென்றவாறு சென்றுகொண்டிருந்தனர். திடீரென வீடொன்றின் கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். பெண்களும் பொலிஸ் அதிகாரிகள் குழுவில் இடம்பெற்றிருந்தனர்.

நத்தார் தாத்தா வேடமணிந்தவர்கள், குறித்து வீட்டுக்குள் நுழைந்து, அங்கிருந்தவர்களை தரையில் சாய்ந்து அசையாமல் இருக்குமாறு உத்தரவிட்டபோது, அது வேடிக்கை நிகழ்ச்சி என்றே போதைப்பொருள் வியாபாரிகள் முதலில் எண்ணினர் என பொலிஸ் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

நத்தார் தாத்தா மற்றும் உதவியாளர்கள் வேடத்தில் பொலிஸ் அதிகாரிகளே வந்துள்ளனர் என்பது பின்னரே அவர்களுக்குப் புரிந்தது.

பொலிஸ் அதிகாரி டேவிட் விலானூவே இது தொடர்பாக கூறுகையில்,  இது கிறிஸ்மஸ் காலம், எனவே வீதியில் நத்தார் தாத்தா சென்றால், (போதைப்பொருள் கடத்தல்காரர்களின்) அதிக கவனத்தை அவர்கள் ஈர்க்க மாட்டார்கள்.  இவ்விடயத்தை எமது முற்றுகைக்கு நாம் பயன்படுத்திக்கொண்டோம்’ எனத் தெரிவித்துள்ளார்.

3 ஆண்களும் பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டனர் பொலிஸ் அதிகாரி  டேவிட் விலானூவே தெரிவித்துள்ளார்.