முன்னாள் அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் அபிவிருத்தியின் போர்வையில் மிக சூட்சுமமான முறையில் கொம்பனித்தெருவிலிருந்து இராணுவத்தினரின் உதவியுடன் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களுக்கான நட்டஈட்டுக் கொடுப்பனவுகளை நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமான ரீதியில் வழங்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் வேண்டுகோள் விடுத்தார்.
பாராளுமன்றத்தில் இடம்பெற்ற ஏற்றுமதி அபிவிருத்தி சட்டத்தின் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
நகர அபிவிருத்தி என்ற போர்வையில் கடந்த அரசாங்கத்தால் கொழும்பு கொம்பனித் தெருவில் சுவீகரிக்கப்பட்ட வீடுகள், கடைகளின் உரிமையாளர் களுக்கு இதுவரையிலும் உரிய நஷ்டஈடுகள் வழங்கப்படாத நிலையில் அம்மக்கள் அலைக்கழிக்கப்பட்டு வருகின்றனர். இம்மக்களை எமது நல்லாட்சி அரசாங்கம் மனிதாபிமானக் கண்ணோட்டத்துடன் நோக்கி அவர்களுக்கான நஷ்ட ஈடுகளைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.
கடந்த அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்ட நகர அபிவிருத்தி அதிகார சபையினால் கொழும்பில் சுமார் 8 ஏக்கர் பரப்பளவுள்ள காணிகள் சுவீகரிக்கப்பட்டு வெளிநாட்டுக் கம்பனிகளுக்கு தாரைவார்த்துக் கொடுக்கப்பட்டன.
இதனால் கொம்பனித் தெருவில் சுமார் 100 – 150 வருடங்களுக்கு மேலாக காணி உறுதிகளுடன் பரம்பரையாக வாழ்ந்து வந்த அப்பாவி மக்களும் கடை, வீடு, காணிகளும் பலவந்தமாக அரசால் சுவீகரிக்கப்பட்டு மிகவும் பெறுமதிவாய்ந்த விலைக்கு வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்கப்பட்டன.
கடந்த அரசாங்கம் தமதுபைகளை நிரப்பிக் கொள்வதில் குறியாக செயற்பட்டதேயன்றி இந்த அப்பாவி மக்களைச் சிறிதளவும் கவனத்தில் கொள்ளவில்லை. கொழும்பு நகரில் பெரும்பாலும் வறிய மக்களே அன்றாட சிறு உழைப்பில் வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களைப் பொருட்படுத்தாது நடந்து கொண்டதாலே இம்மக்கள் இன்று அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
சொத்துக்களை சுவீகரித்த நகர அபிவிருத்தி அதிகார சபையும் கருத்திட்டத்தை மேற்கொண்ட இந்திய நிறுவனமும் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொண்டே இவ்வேலைத்திட்டத்தை முன்னெடுத்தன. அந்த ஒப்பந்தத்தில் என்ன அடங்கியிருக்கிறது என்பதை நாம் அறியோம்.
ஆனால் வீடுகள் சுவீகரிக்கப்படும் போது அதற்கான நஷ்டஈடுகள், இழப்பீடுகள் குறித்தும் கருத்தில் எடுத்திருக்க வேண்டும். அதனை விடுத்து இம்மக்களை நகரத்துக்குப் புறம்பான இடங்களில் முதியோர் இல்லங்களில் அடைத்து வைப்பது போன்றதொரு நடவடிக்கையையே அப்போது முந்திய அரசு மேற்கொண்டது.
இம்மக்களை கொழும்பிலிருந்து வெளியேற்றியமை ஒரு அடாவடி நடவடிக்கையாகவே கருத வேண்டியிருக்கிறது. தம் சொந்த இடங்களைப் பறிகொடுத்த இந்த அப்பாவி மக்கள் இன்றும் வாடகை வீடுகளிலே பல அசெளகரியங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
எமது நல்லாட்சி அரசாங்கம் இம்மக்களை ஒரு போதும் கைவிடாது என்ற நம்பிக்கை இம்மக்களுக்குண்டு. எனவே இவர்களது விடயத்தை கவனத்தில் கொண்டு இவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைகளை காலம் தாழ்த்தாது வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொழும்பில் சுமார் 6 ,-7 இலட்சம் மக்கள் வாழ்கிறார்கள். இவர்களது வாழ்வாதாரம் உயர்த்தப்பட வேண்டும்.
தொடர்ந்தும் இவர்கள் விடயத்தில் பாராமுகம் காட்டப்படுமானால் எதிர்காலத்தில் இவர்களை பாதாள உலகக் கோஷ்டியினர்களாகவும் போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களாகவும் தான் நாம் காணப்போகிறோம். அத்துடன் ஏற்கனவே வறுமையில் உள்ள இவர்களை வறுமைக்கோட்டுக்கும் கீழ் மட்டத்தில் உள்ளவர்களாக மாற்றாது அதற்கு மாற்று வழிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
மூன்றாம் உலக நாடுகளில் இதேநிலை அடைந்துள்ளதை நாம் நாளாந்தம் ஊடகங்கள் வாயிலாகக் காண்கிறோம். இந்தியா, பிரேசில், லத்தீன் அமெரிக்கா போன்ற நாடுகளில் மக்கள் போராட்டங்கள் வெடித்துக்கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் மக்கள் புறக்கணிக்கப் பட்டதன் பெறுபேறாகவே குழப்பங்கள் தலைதூக்கிக் கொண்டிருக்கின்றன.
கொழும்பு வாழ் எமது மக்களையும் இந்நிலைக்குத் தள்ளவே கடந்த அரசின் நடவடிக்கைகள் அமைந்தன. இந்நிலை தொடரவிடாது எமது நல்லாட்சியிலாவது இம்மக்களுக்குரிய உரிமைகள், தேவைகளை ஈடுசெய்து கொடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன் என்றார்.