தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட இருவரின் கோரிக்கை மனுக்கள் ஏற்பு – மறுவிசாரணை செய்ய ஈரான் நீதிமன்றம் உத்தரவு

99 0

 ஈரானில் தூக்குத் தண்டனையை எதிர்த்து மனுதாக்கல் செய்த ராப் பாடகர் உள்ளிட்ட இரு போராட்டக்காரர்களின் மனுவை அந்நாட்டு நீதிமன்றம் ஏற்றுக் கொண்டு மறுவிசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

’கடவுளுக்கு எதிரான போர்’ என்ற குற்றச்சாட்டில் ஈரான் கால்பந்தாட்ட வீரர், அமீர் நசீர் உள்ளிட்ட 20 பேருக்கு ஈரான் மரண தண்டனை விதித்துள்ளது. இவர்களில் சிலருக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. இது சர்வதேச அளவில் சர்ச்சையை ஏற்படுத்தியது. மனித உரிமை அமைப்புகளும் இதற்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில் இரு போராட்டக்காரர்களின் மனுவை ஏற்று அவர்களின் வழக்கை மறு விசாரணை செய்ய ஈரான் நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஈரான் நீதிமன்ற இணைய பக்கத்தில், “மரணத் தண்டனைக்கு எதிராக சமான் சைதி ( ராப் பாடகர்) மற்றும் முகமது கோபாதலின் தாக்கல் செய்த மனு ஏற்று கொள்ளப்பட்டு, மறுவிசாரணைக்கு உத்தரவிடப்படுகிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாஷா அமினி என்ற இளம்பெண்ணின் மரணத்தைத் தொடர்ந்து ஈரானில் ஹிஜாப் எதிர்ப்புப் போராட்டம் தீவிரமடைந்தது. இரு மாதங்களுக்கும் மேலாக நடந்த இந்த போராட்டத்தில் 300-க்கும் அதிகமானவர்கள் பலியாகினர். 15,000 பேர் வரை கைது செய்யப்பட்டுள்ளனர். ஹிஜாப் எதிர்ப்பு போராட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களில் 20 பேருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இவர்களில் சிலர் கடந்த சில வாரங்களாக பொது வெளியில் தூக்கிலிடப்பட்டனர். போராட்டக்காரர்களில் 400 பேருக்கு 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.