வேளாங்கண்ணி பேராலயத்தில் கிறிஸ்துமஸ் சிறப்பு கூட்டுத் திருப்பலி: ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

109 0

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, வேளாங்கண்ணி பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு நடைபெற்ற சிறப்பு கூட்டுத்திருப்பலியில், ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி, நாகை மாவட்டம் வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்தில் நேற்று முன்தினம் நள்ளிரவு சேவியர் திடலில் சிறப்பு கூட்டுத் திருப்பலி நடைபெற்றது. இதையொட்டி, நள்ளிரவு 12 மணியளவில் பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார், துணை அதிபரும், பங்குத் தந்தையுமான அற்புதராஜ் அடிகளார் உட்பட பாதிரியார்கள் திருவுடை அணிந்து, பேராலயத்தின் பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்தனர். அவர்களை சிறுமிகள் மலர்தூவி வரவேற்றனர்.

அந்தோனியாருடன், தேவதை உடை அணிந்த சிறுமிகள் குழந்தை இயேசு சொரூபத்தை சுமந்து வந்தனர். அவர்களிடம் இருந்து சொரூபத்தை இருதயராஜ் அடிகளார் பெற்றுக்கொண்டு, பிரார்த்தனை மண்டபத்துக்கு வந்தார்.

இயேசு குடில்: பின்னர், சொரூபத்தை புனிதப்படுத்தி, அதை உயர்த்திப் பிடித்தபடி பிரார்த்தனை மண்டபம் முழுவதும் கூடியிருந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்களுக்கும் தெரியும்படி, அனைத்து திசைகளிலும் காட்டினார். தொடர்ந்து, குழந்தை இயேசு சொரூபத்தை பங்குத் தந்தை அற்புதராஜ் அடிகளார் குடிலில் கிடத்தினார்.

பின்னர், பேராலய அதிபர் இருதயராஜ் அடிகளார் தமிழிலும், ஆங்கிலத்திலும் கூட்டுத் திருப்பலியை தொடங்கி வைத்தார். அப்போது, பக்தர்கள் குழந்தை இயேசுவே வாழ்க என வாழ்த்து கோஷமிட்டனர். பேராலயத்தின் சார்பில் பக்தர்களுக்கு கிறிஸ்துமஸ் வாழ்த்து செய்தி வாசிக்கப்பட்டது. பின்னர், பேராலய ஊழியர்கள் தமிழிலும், ஆங்கிலத்திலும் இறைவார்த்தை வழிபாடு செய்தனர்.

குழந்தை இயேசுவை முத்தமிட்ட பாதிரியார்கள், பின்னர் பார்வையாளர்கள் பகுதிக்கு கொண்டு செல்ல, பக்தர்களும் குழந்தை இயேசுவை முத்தமிட்டனர். தொடர்ந்து தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கொங்கணி, இந்தி ஆகிய மொழிகளில் மன்றாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.

பின்னர், கிறிஸ்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் கட்டியணைத்து கிறிஸ்துமஸ் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனர். விழாவை முன்னிட்டு நேற்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஒரு மணிநேரத்துக்கு ஒருமுறை பேராலயம், கீழ் ஆலயம், விண்மீன் ஆலயம் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.