இலங்கையில் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச் சட்டத்தினால் தமிழ் மக்கள் எதிர்கொண்டு வருகின்ற அவலங்களை சர்வதேசத்தின் பார்வைக்கு கொண்டு வரும் முயற்சியாக ‘இலங்கையின் இருட்டறை'(The Dark Cornors of Sri Lanka) எனும் ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் மார்ச் மாதம் ஐ.நா மனித உரிமை கூட்டத்தொடரில் வெளியிட்டும் நோக்கோடு மனித உரிமைகள் மேம்பாட்டிற்கும் பாதுகாப்பிற்குமான நிலையம் (CPPHR) எனும் அமைப்பினால் இந்த ஆவணப் படம் தயாரிக்கப்பட்டுள்ளது. முழுமையாக இலங்கையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்படத்தில் பயங்கரவாத தடை சட்டத்தால் பாதிக்கப்பட்டு வாழும் சாட்சிகளாக இருக்கும் பலர் தங்களது வாக்குமூலங்களை வழங்கியுள்ளனர்.
பெற்றோலால் நனைக்கப்பட்ட பொலுத்தீன் பைகளால் முகங்களை மூடி தாக்கப்ட்டவர்களும், அசிட் ஊற்றி தாக்கப்பட்டவர்களும், நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த போது பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டவர்களும், முள்ளுப்பற்றைக்குள் கைகள் கட்டப்பட்ட நிலையில் உழவு இயந்திரம் மூலம் கட்டி இழுக்கப்பட்டவர்களும், வீட்டில் தங்கியிருந்தபோது தங்களின் கண் முன்னால் தாய் பாலியல் வல்லுறவுக்கு உற்படுத்தப்பட்டமை நேரில் பார்த்த பிள்ளைகள் என பலர் தமது உள்ளக்குமுறல்களை இந்த ஆவணப்படத்தில் வெளிப்படுத்தியுள்ளனர்.
ஆங்கிலம், தமிழ் ஆகிய இரண்டு மொழிகளில் வெளியிடப்பட்டுள்ள இந்த ஆவணப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் 2015 ஆண்டு நிறைவேற்றப்பட்ட பிரேரணையில், பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அரசாங்கம் ஒப்புதல் அளித்திருந்தது. ஆனால், இன்றும் குறித்த சட்டம் அமுலில் இருந்து வருகின்ற நிலையிலேயே இந்த ஆவணப்படம் தயாரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.