கோடநாடு கொலை, கொள்ளைவழக்கு மீண்டும் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது. சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக பொறுப்பேற்றுள்ள அபய்குமார் சிங் ரகசியமாக கோடநாடு சென்று விசாரணை நடத்தியுள்ளார்.
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதா கடந்த 2016-ல் காலமானார். இதைத் தொடர்ந்து, நீலகிரி மாவட்டத்தில் உள்ள கோடநாடு எஸ்டேட் அவரது தோழியான சசிகலா உள்ளிட்டோரின் கட்டுப்பாட்டில் வந்தது. இந்த நிலையில், சசிகலா சிறைக்கு சென்ற பிறகு,2017 ஏப்.24-ம் தேதி கோடநாடு எஸ்டேட்டில் இருந்து விலை உயர்ந்த பொருட்கள், ஆவணங்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்தனர். அப்போது, அவர்களை தடுக்க முயன்ற காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜிடம் விசாரணை நடத்த போலீஸார் ஆயத்தமான நிலையில், அவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக கூறப்பட்ட கேரளாவை சேர்ந்த சயான், வாழையாறு மனோஜ் ஆகியோரை போலீஸார் தேடிய நிலையில் கேரளாவில் குடும்பத்துடன் சாலை விபத்தில் சிக்கினார் சயான். இதில் அவரது மனைவி, மகள் உயிரிழந்தனர். தொடர்ந்து, கோடநாடு பங்களாவில் கணினி ஆபரேட்டராக இருந்த தினேஷ்குமார் தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து நடந்த இந்த சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
300 பேரிடம் விசாரணை: இந்த நிலையில், தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கோடநாடு வழக்கு மீண்டும் தீவிரமடைந்தது. மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டிஐஜி முத்துசாமியின் நேரடி மேற்பார்வையில் நீலகிரி மாவட்ட போலீஸார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டன. சசிகலா, முன்னாள் எம்எல்ஏ ஆறுகுட்டி உட்பட 300-க்கும் மேற்பட்டோரிடம் நேரடியாகவும், மறைமுகமாகவும் விசாரணை நடத்தப்பட்டது. பலர் கைது செய்யப்பட்டனர். ஆனாலும், கொலைக்கான மூல காரணம் வெளிவரவில்லை.
இதையடுத்து, இந்த வழக்கு கடந்த செப்டம்பரில் சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. அப்பிரிவின் டிஜிபியாக இருந்த ஷகில் அக்தர் கடந்த அக்.31-ம் தேதியுடன் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, சிபிசிஐடி கூடுதல் டிஜிபியாக அபய்குமார் சிங் நியமிக்கப்பட்டார். அவரது நேரடி மேற்பார்வையில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை தற்போது மீண்டும் சூடுபிடித்துள்ளது.
சமீபத்தில், உதகை போலீஸ் அதிகாரிகளுக்கே தெரியாமல், கூடுதல் டிஜிபி அபய்குமார் சிங் மிக ரகசியமாக கோடநாடு சென்று 2 நாட்கள் அங்கு தங்கியிருந்து விசாரணை நடத்தியுள்ளார். பிறகு, சிபிசிஐடி ஐ.ஜி. தேன்மொழியும் 10 நாட்கள் அங்கு தங்கி விசாரணை நடத்தியுள்ளார்.
கோடநாடு வழக்கில் இதுவரை விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் தனியாக அறிக்கை கேட்டுப் பெறப்பட்டுள்ளது. சேலம், தருமபுரி, கோவை பகுதிகளில் வழக்கு விசாரணையில் கை தேர்ந்த போலீஸாரின் பட்டியல் சேகரிக்கப்பட்டு, அதில் இருந்து 10 எஸ்.ஐ.கள் உட்பட 34 போலீஸார் தனிப்படையில் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளனர். வரும் மக்களவை தேர்தலுக்குள் கோடநாடு வழக்கை முடிக்க சிபிசிஐடி போலீஸார் வியூகம் அமைத்து செயல்பட்டு வருகின்றனர்.
ராமஜெயம் கொலை வழக்கு: அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ல் நடைபயிற்சி சென்றபோது கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. 10 ஆண்டுகள் விசாரித்தும், கொலைக்கான நோக்கம் தெரியவில்லை. எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு போலீஸ் குழுவினர் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர்.
வழக்கின் பின்னடைவுக்கு காலதாமதமே காரணம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அறிவியல் பூர்வமாக விசாரணை நடத்தி, தடயங்களை சேகரித்து குற்றவாளிகளை விரைவில் கைது செய்வோம் என போலீஸ் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித் துள்ளனர். கோடநாடு வழக்கில் இதுவரை விசாரணை நடத்திய போலீஸ் அதிகாரிகளிடம் தனியாக அறிக்கை கேட்டும் பெறப்பட்டுள்ளது.