சிசிடிவி கேமராக்களின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்த மாணவர்களுடன் இணைந்த காவல்துறை

76 0

சிசிடிவி கேமராக்களின் தொழில்நுட்ப தரத்தை உயர்த்தி, அதை குற்றத் தடுப்பு நடவடிக்கைக்கு பயன்படுத்த சென்னை போலீஸார் மாணவர்களுடன் இணைந்துள்ளனர்.

சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதால், குற்ற சம்பவங்கள் பெருமளவு குறைந்துள்ளது. காவல் துறையின் 3-வது கண் என சிசிடிவி கேமரா அழைக்கப்பட்டு வருகிறது. ஆரம்ப காலத்தில் போலீஸார் பொருத்திய கேமராக்கள் துல்லியமாக இல்லாமல் இருந்தது.நாளடைவில் அவைகள் துல்லியமாக, பதிவாகும் காட்சிகள் தெளிவாக இருக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது.

அதன் பின்னர், தொலைவில் இருக்கும் வாகன எண்களைகூட தெளிவாக படம் பிடித்து அதன் உரிமையாளர் யார் என உடனுக்குடன் தெரிவிக்கும் வகையில் மேம்படுத்தப்பட்டது. தற்போது அடுத்த கட்டமாக சிசிடிவி கேமராக்களை தரம் உயர்த்தி, குற்ற தடுப்பு நடவடிக்கைகளுக்கு பயன்படுத்த சென்னை காவல் ஆணையர் சங்கர்ஜிவால் முடிவு செய்துள்ளார். இதற்காக மாணவர்களுடன் சைபர் க்ரைம் போலீஸார் கைகோர்த்துள்ளனர்.

அதன்படி, சென்னை பெருநகர காவல்துறையின், மத்திய குற்றப்பிரிவு, சைபர் க்ரைம் பிரிவினரால் சிசிடிவி கேமரா பதிவு காட்சிகளைக் கொண்டு விவரங்கள் சேகரிப்பது, அடையாளங்கள் காண்பது உள்ளிட்ட தொழில் நுட்பங்களை பகுப்பாய்வு செய்வது தொடர்பாக 8 தலைப்புகளில் “சைபர் ஹேக்கத்தான்” என்ற போட்டி கடந்த 6-ம்தேதி இந்தியா முழுவதும் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

இப் போட்டியில் 302 குழுவினர்பல்வேறு கல்வி நிறுவனங்களிலிருந்து கலந்து கொண்டனர். இந்தியா முழுவதிலுமிருந்து விண்ணப்பங்கள் ஏற்கப்பட்டு அவர்களிடமிருந்து ப்ராஜக்ட் சுருக்கம் பெறப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. 300க்கும் மேற்பட்ட இத்தகைய திட்ட வரைவுகளை சைபர் க்ரைம் போலீஸார் ஆராய்ந்தனர்.

இதில், 36 குழுவினர் இறுதிச்சுற்றுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களுக்கான அடுத்த கட்ட தேர்வுகள் இன்று (26-ம் தேதி) அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற உள்ளது. இவர்களில் சிறந்த குழுவினரை தேர்ந்தெடுக்க கல்லூரிப் பேராசிரியர்கள், சைபர் தொழில் நுட்ப வல்லுநர்கள் அடங்கிய 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இப்போட்டியில் பங்கு பெறுபவர்களில் சிறந்து விளங்கும் முதல் 3 குழுவினருக்கு ரொக்கப் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் சங்கர் ஜிவால் வழங்குகிறார். போட்டியில் வெற்றி பெறும் குழுவினருக்கு ரூ.50,000, ரூ.30,000, 20,000 என முதல், இரண்டு, 3-ம் இடங்களை பிடிக்கும் குழுவினருக்கு வழங்கப்படுகிறது. மாணவர்கள் கண்டுபிடிக்கும் தொழில் நுட்பத்தை சென்னை போலீஸார் பயன்படுத்த உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.