சிறிலங்காவின் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் சீனா தனது முதலீடுகளை மேற்கொள்வதில் ஆர்வமாக இருந்தது. இதன்மூலம் இங்கு வர்த்தக, போக்குவரத்து மற்றும் தொடர்பாடல் போன்றவற்றை விருத்தி செய்வதற்கான திட்டம் காணப்பட்டது.
இந்நிலையில் புதிய அனைத்துலக நகரம் ஒன்றை சிறிலங்காவின் பின்தங்கிய மாவட்டமான அம்பாந்தோட்டையில் உருவாக்குவதே சிறிலங்கா, சீனா மற்றும் பல நாடுகளின் கனவாக இருந்தது. சிறிலங்கா தனது நாட்டில் பல்வேறு பாரிய திட்டங்களை மேற்கொண்டதன் மூலம் நிதி நெருக்கடிக்கு உட்பட்டுள்ளது.
இந்த திட்டங்களில் சில பயனற்றவையாகவும் போயுள்ளன. இவ்வாறான திட்டங்கள் பாரிய பெறுமதியான அனைத்துலக கடன் சுமையையும் ஸ்திரமற்ற அரசியல் மற்றும் சமூக சூழலையும் உருவாக்கியது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதத்தை 99 ஆண்டுகால குத்தகைக்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதிக்கு சீனாவிடம் கையளிப்பது தொடர்பான உடன்படிக்கை ஜனவரி 07 அன்று உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்பட்டிருந்தால், தற்போது அம்பாந்தோட்டைத் துறைமுகம் சீனாவின் கட்டுப்பாட்டில் இருந்திருக்கும்.
அனைத்துலக அரசியல் நெருக்கடி மற்றும் நாட்டு மக்களால் மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டங்கள் போன்றவற்றைக் கருத்திற் கொண்டு இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை சிறிலங்கா அரசாங்கம் பிற்போட்டது.
2008ல் 300 மில்லியன் டொலர் பெறுமதியான கடன் சீனாவிடமிருந்து பெறப்பட்டு அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தக் கடனைத் திருப்பிச் செலுத்துவதில் சிறிலங்கா மிகவும் துன்பப்படுகிறது. துறைமுகத்தின் செயற்படற்ற தன்மையும் இதற்குக் காரணமாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு அருகில் தொழிற்பேட்டை ஒன்றை அமைப்பதும் இத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் காணப்பட்ட போதிலும் இது இன்னமும் அமுல்படுத்தப்படவில்லை. இந்த வலயம் அமைக்கத் தவறியமையும் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் வருமானம் கிடைக்காமைக்கான காரணமாகும்.
தொழிற்பேட்டை வலயம் ஒன்று இல்லாத துறைமுகமானது ஒரு சக்கரத்தில் ஓடும் மிதிவண்டிக்குச் சமனானதாகும். அதாவது இத்திட்டம் ஒருபோதும் வெற்றியளிக்காது என்பதையே இது குறித்து நிற்கிறது. ஆகவே இத்துறைமுகத்தில் பல்வேறு அபிவிருத்திகள் இடம்பெறுவதற்கு தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பது மிகவும் அவசியமானதாகும்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா குத்தகைக்கு பெற்றுக் கொள்வதுடன் அதனுடன் கூடிய 15000 ஏக்கர் நிலப்பரப்பில் தொழிற்பேட்டை வலயம் ஒன்றை அமைப்பதற்கான திட்டத்தையும் கொண்டிருந்தது. ஆனால் சிறிலங்காவின் உள்நாட்டில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்கள் மற்றும் அரசியல் சர்ச்சை போன்றவற்றால் இத்திட்டம் கைவிடப்பட்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் 80 சதவீதத்தை சீன வர்த்தக மற்றும் கப்பல் நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்குவது தொடர்பாகவும் இங்கு தொழிற்பேட்டை வலயம் ஒன்றையும் அமைப்பது தொடர்பான செய்தி கடந்த மாதம் வெளியிடப்பட்டதன் பின்னர், உள்நாட்டு மக்களால் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆர்ப்பாட்டங்கள் வர்த்தக சங்கங்கள், தேசிய அமைப்புக்கள், சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவின் தலைமையிலான எதிர்க்கட்சி அரசியல்வாதிகள் ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
சிறிலங்காவின் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சவே தனது ஆட்சிக்காலத்தில் அம்பாந்தோட்டை அபிவிருத்தியை ஆரம்பித்து வைத்திருந்தார். இவ்வாறான எதிர்ப்புக்களின் மத்தியில் சீனாவிடம் அம்பாந்தோட்டைத் துறைமுகத்தைக் கையளிக்கும் நடவடிக்கை இடைநிறுத்தப்பட்டது.
அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிடம் கையளித்தல் மற்றும் தொழிற்பேட்டை வலயம் ஒன்றை உருவாக்குதல் ஆகியன தொடர்பான உடன்படிக்கையை எதிர்த்து பொதுமக்களால் ஆர்ப்பாட்டங்கள் மேற்கொள்ளப்பட்டதால் மக்களை அமைதிப்படுத்துவதற்காக இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதை சிறிலங்கா அரசாங்கம் தாமதப்படுத்தியுள்ளது.
இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் அம்பாந்தோட்டையில் 5 பில்லியன் டொலர் முதலீடு மேற்கொள்ளப்படும் எனவும் சீனா முன்னர் வாக்குறுதி அளித்திருந்தது.
சிறிலங்காவில் அரசியல் சார் எதிர்ப்பு காண்பிக்காவிட்டிருந்தால், அம்பாந்தோட்டையில் அடுத்த இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளில் 3-5 பில்லியன் டொலர் வரை முதலீடு செய்வதற்கு பத்து வரையான பெரிய சீன நிறுவனங்கள் தயாராக இருந்ததாக சிறிலங்காவிற்கான சீனத்தூதுவர் ஜி சியான்லியாங்க் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா பெரும் கடன் நெருக்கடியில் உள்ள இந்த வேளையில் இவ்வாறான எதிர்ப்புச் சம்பவங்கள் நிகழ்கின்றன. கடந்த ஆண்டின் இறுதியில், சிறிலங்காவின் கடனானது 65 பில்லியன் டொலராகக் காணப்பட்டது. இதில் எட்டு பில்லியன் சீனாவிற்குச் சொந்தமானதாகும். ஆகவே இந்தக் கடனை மீளச் செலுத்துவதற்கு தேசிய உற்பத்தியின் 75 சதவீதம் தொடக்கம் 95.4 சதவீதம் வரையான அரசாங்க வருமானம் தேவைப்பட்டது.
2016ல் அனைத்துலக நாணய நிதியத்திடமிருந்து 1.5 பில்லியன் டொலர் பெறுமதியான கடன் பெறப்பட்டதன் பின்னர், சிறிலங்கா தனது பொருளாதார நெருக்கடியைக் குறைப்பதற்கான சில செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என அனைத்துலக கடன் வழங்கும் நிறுவனத்தால் அழுத்தம் இடப்பட்டுள்ளது. இவ்வாறானதொரு நிதி நெருக்கடிக்குப் பரிகாரமாகவே அம்பாந்தோட்டைத் துறைமுகத்தை சீனாவிற்கு 1.1 பில்லியன் டொலர் பெறுமதியில் குத்தகைக்கு வழங்குவதெனத் தீர்மானிக்கப்பட்டது.
கிழக்காசியா தொடக்கம் ஐரோப்பா வரையான சீனாவின் கடல்சார் தொடர்பை மேலும் அதிகரிப்பதற்கான ஒரு முயற்சியாக ஆரம்பிக்கப்பட்ட சீனாவின் ‘கரையோரப் பட்டுப்பாதைத் திட்டத்தை’ வெற்றியாக்குவதற்காக சிறிலங்கா போன்ற கேந்திர அமைவிடங்களைக் கொண்ட நாடுகளில் சீனாவால் நீண்டகால மற்றும் செலவு மிக்க கட்டுமானத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
இந்நிலையில் புதிய பட்டுப்பாதைத் திட்டத்தை வெற்றி கொள்வதற்கு ‘பைகள் நிரம்பிய பணம்’ மட்டுமே போதியதாக இல்லை என்பதையே அம்பாந்தோட்டைத் திட்டத்தின் படுதோல்வி தெளிவாகக் காண்பிக்கிறது.
வழிமூலம் – Forbes
ஆங்கிலத்தில் – Wade Shepard
மொழியாக்கம் – நித்தியபாரதி