யாழ்.பல்கலையில் மார்கழிப் பெருவிழா!

126 0

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சைவசித்தாந்தத் துறையும் தென்னாடு செந்தமிழாகம சிவமடத்தின் சைவ மாணவர் சபையும் இணைந்து நடாத்திய மார்கழிப் பெருவிழா இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தினுள் அமைந்துள்ள ஶ்ரீ பரமேஸ்வரன்  ஆலயத்தில் இடம்பெற்ற விசேட  வழிபாடுகளைத் தொடர்ந்து, தேவாரத் திருமுறையுடன் சைவக் குரவர்கள் நால்வரும் எழுந்தருள கைலாசபதி அரங்கில் நிகழ்வுகள் ஆரம்பமாகின. காலை, மாலை அரங்கங்களாக நிகழ்வுகள் இடம்பெற்றதோடு, கலந்து கொண்டவர்களுக்கு அமுதூட்டும் அன்னதானமும் இடம்பெற்றது.

காலை அரங்க நிகழ்வில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சைவசித்தாந்தத் துறை தலைவர் கலாநிதி.பொன்னுத்துரை சந்திரசேகரம் தொடக்க உரையையும், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர் சி.சற்குணராசா வாழ்த்துரையையும் ஆற்றினர். அத்துடன், திருமுறை விண்ணப்பம், சிறப்புரை, கெளரவிப்பு நிகழ்வும்  இடம்பெற்றன.

மாலை அரங்க நிகழ்வில்,  தொடக்க உரை, வாழ்த்துரை, திருமுறை விண்ணப்பம், சிறப்புரை, திருவாசக கட்டுரைப் போட்டிக்கான பரிசில் வழங்கல் என்பன இடம்பெற்றன.

திருமுறை விண்ணப்பம் மற்றும் சிறப்புரைக்காக இந்தியாவின் தமிழகத்திலிருந்து துறைசார் சான்றோர்களான அண்ணாமலைப் பல்கலைக்கழக தேவார உதவிப் பேராசிரியர் முனைவர். திருஞான.பாலச்சந்திரன் ஓதுவார் மற்றும் தருமை ஆதீனப் புலவர் சிவத்திரு.எம்.கே.பிரபாகரமூர்த்தி ஆகியோர் வருகை தந்திருந்தனர்.