வத்தேகம பொலிஸ் பிரிவிலுள்ள மடவல, பிட்டியேகெதர என்ற இடத்தில் முச்சக்கர வண்டியொன்றை நேற்று (டிச. 24) பொலிஸார் சோதனையிட்டபோது அனுமதியின்றி கொண்டு செல்லப்பட்ட இறைச்சி, துப்பாக்கி மற்றும் ரவைகளுடன், நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
அதன்படி, நக்கில்ஸ் வன பாதுகாப்பு மலைச்சாரலில் வேட்டையாடப்பட்ட பெரியளவு காட்டுப்பன்றியொன்றின் 41 கிலோ இறைச்சி, 12ஆம் இலக்க வகையைச் சேர்ந்த துப்பாக்கி மற்றும் 2 ரவைகள் என்பவற்றை நுட்பமான முறையில் பதுக்கி வைத்து, முச்சக்கர வண்டியில் எடுத்துச் சென்றபோதே சோதனையிடப்பட்டு குறித்த பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதில் துப்பாக்கியை சந்தேகம் ஏற்படாதவாறு ‘ஜக்கெட்’ ஒன்றில் சுற்றி கையில் வைத்திருந்ததோடு, இறைச்சியையும் மறைத்து வைத்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலும், வாகனத்தை சோதனையிட்டு பொருட்களை கைப்பற்றியதை தொடர்ந்து, சந்தேகத்தின் பேரில் முச்சக்கர வண்டி சாரதி உட்பட நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் பன்வில மற்றும் கலகெதர பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் இச்சம்பவம் தொடர்பில் அவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.