போதைப்பொருள் மாபியா வலைப்பின்னலாக உள்ளது!

203 0

மாவட்டத்துக்கு போதைப் பொருள் வருவதைத் தடுப்பது மாவட்ட நிருவாகத்திற்கு அப்பாற்பட்ட  ஒரு மாபியா வலைப்பின்னலாக உள்ளது என மட்டக்களப்பு மேலதிக மாவட்டச் செயலாளர் சுதர்ஷினி ஸ்ரீகாந்த் தெரிவித்தார்.

பெண் குடும்பத் தலைவர்களுக்கான மாறிச் செல்லும் வரையறைகளை உருவாக்குதல் எனும் ஆய்வின் கொள்கைச் சுருக்க வெளியீட்டு நிகழ்வில் அவர் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றினார்.

விழுது ஆற்றல்மேம்பாட்டு மையத்தின் ஒழுங்கமைப்பில் அந்நிறுவனத்தின் நிகழ்ச்சித் திட்ட தலைமை அதிகாரி இந்துமதி ஹரிஹரதாமோதரன் தலைமையில் மட்டக்களப்பு தனியார் விடுதியில் இந்நிகழ்வு வெள்ளிக்கிழமை (டிச.23) இடம்பெற்றது.

இதில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் பதுளை மாவட்டங்களைச் சேர்ந்த பெண்கள் ஒன்றிய, பெண்கள் சமாச செயற்பாட்டாளர்களின் ஆய்வு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

மாற்றத்தை நோக்கி இளையோர் சமூகத்தால் அடையாளப்படுத்தப்பட்ட சமூக பொருளாதார அரசியல் பிரச்சினைகள், பொருளாதார நெருக்கடியால் இளையோர் எதிர்நோக்கும் சமூகப் பிரச்சினைகள்,  பெருந்தோட்டப் பெண் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களும் அதன் தாக்கங்களும், மலையகத்தில் மாணவர்களின் இடைவிலகல், முஸ்லிம் மக்கள் மத்தியிலான விவாகரத்தின் போக்குகளும் அதன் தாக்கங்களும் உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளின் கண்டுபிடிப்புகள், பாதிப்பினால் சமூகம் எதிர்கொள்ளும் அபாயங்கள் மற்றும் அனைத்து மட்டங்களுக்குமான பரிந்துரைகள் ஆகியவை நிகழ்வில் பிரகடனங்களாக சமர்ப்பிக்கப்பட்டன.

நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு மேலும் உரையாற்றிய மாவட்ட மேலதிகச் செயலாளர் சுதர்ஷினி, அரசின் எந்தவொரு உதவித் திட்டத்திலும் முதலாவதாக உதவிகளைப் அபெறும் தரப்பாக பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கிறார்கள். பெண்களுக்கான உரிமைகள் கொள்கைகள், சட்ட ஏற்பாடுகள் தொடர்பாக விழுது ஆற்றல் மேம்பாட்டு மையத்தினால் பல்வேறு கொள்கையாக்கங்கள் இங்கே வழங்கப்பட்டிருக்கின்றன.

 

மட்டக்களப்பில் 35 ஆயிரம் பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்கள் இருக்கின்றார்கள். இவர்களில் சுமார் 15 ஆயிரம் குடும்பங்கள்  பொருளாதார மேம்பாடு கண்டவர்களாக உள்ளார்கள். கல்வி ரீதியிலான முன்னேற்றங்களைக் கண்டவர்களாக இவர்கள் இருக்கின்றார்கள்.

நாம் காலங்காலமாக பெண்களையும் சிறுவர்களையும் இலகுவில் பாதிக்கப்படக் கூடியவர்காளக அடையாளப்படுத்தி வந்திருக்கின்றோம். எந்தவொரு பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களும் பூச்சியத்தில் இல்லை என்று நிச்சயமாக நான் கூறுவேன். அவர்களை பூச்சிய நிலைமையிலிருந்து முன்னேற்றியதன் பங்களிப்பு அரச சார்பற்ற நிறுவனங்களையும் அரசின் சில கொள்கைகளையும் சாரும்.

பெண்களை பொருளாதார ரீதியாக தூக்கி விடுவதுதான் அவர்களை மீண்டெழுந்து சொந்தக் காலில் நிற்க வைப்பதற்கான ஒரே வழியாகும். அடுத்தது அவர்களை அரசில் தீர்மானங்களை எடுக்கின்ற அரசியல் பங்களிகளாக மாற்ற வேண்டும். ஒட்டு மொத்த சமூகத்திற்கே கேடு உண்டாக்கும் போதைப் பொருள் பாவனை, பெண்களை பாலியல் இலஞ்சத்திற்கு ஆளாக்குவது என்பவை வெறுமனே பெண்களுக்கான பிரச்சினைகளாக மட்டும் நோக்கக் கூடாது. இதற்கு அனைவரும் இணைந்து சட்டம் ஒழுங்கின் அடிப்படையில் தீர்வு காண வேண்டும்.

நாங்கள் மாவட்ட நிருவாகம் போதைப் பொருள் ஒழிப்பிற்காக விளம்பரம் இல்லாமல் பல்வேறு செயற்பாடுகளைச் செய்து கொண்டிருக்கின்றோம். இதில் ஒட்டு மொத்த சமூகங்களும் இணைந்து கொள்ள வேண்டும். போதைப் பொருள் ஊடுருவும் மார்க்கம், அதனைத் தடுத்து நிறுத்துவது நிர்வாகத்திலுள்ள எங்களது கைகளுக்கு எட்டாத  ஒரு மாபியாவாகவே கருத வேண்டியுள்ளது” என்றார்.

மேலும், இந்நிகழ்வில் பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் பசீஹா அஸ்மி நிகழ்நிலை ஊடாக ஆய்வு அறிக்கையை சமர்ப்பித்து உரையாற்றினார். கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறைப் பேராசிரியர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், அட்டாளைச்சேனை பிரதேச உதவிச் செயலாளர் பாத்திமா நஹீஜா, பதுளை மாவட்டம் சார்பில் பிரமேதா பெருமாள், பரசுராமன் சாந்தன், கே. தனப்பிரதீப், கே. ஜெயகௌரி, திருகோணமலை மாவட்டம் சார்பில் அபிவர்ணா வர்ணகுலசிங்கம், அம்பாறை மாவட்டம் சார்பில் ஷாஹிறா, ஏ.கே. பாத்திமா சஜிதா, ஏ.ஏ. நூறுல் ஹுஸ்னா, மட்டக்களப்பு சார்பில் விஜயலக்ஸ்மி இராமச்சந்திரன், தனுஜா வடிவேல் உள்ளிட்ட இன்னும் பலர் ஆய்வறிக்கைகளைச் சமர்ப்பித்து உரையாற்றினர். விழுது நிறுவனத்தைச் சேர்ந்த சுகிர்தவிழி,  நிர்மலா உட்பட இன்னும் பலரும் கலந்து கொண்டனர்.